தவறான சிகிச்சையால் பெண் இறந்ததாக கூறி சாலை மறியல்


தவறான சிகிச்சையால் பெண் இறந்ததாக கூறி சாலை மறியல்
x
தினத்தந்தி 30 May 2021 11:08 PM IST (Updated: 30 May 2021 11:08 PM IST)
t-max-icont-min-icon

பிரசவத்தின் போது தவறான சிகிச்சையால் பெண் இறந்ததாக கூறி மயிலாடுதுறையில் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிகாரிகள் சம்பவ இடத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மயிலாடுதுறை:
பிரசவத்தின் போது தவறான சிகிச்சையால் பெண் இறந்ததாக கூறி மயிலாடுதுறையில் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிகாரிகள் சம்பவ இடத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர்.  
பெண் சாவு
மயிலாடுதுறை அருகே சித்தர்காடு தெற்கு தெருவை சேர்ந்தவர் இளையராஜா. இவருடைய மனைவி ராஜகுமாரி (வயது 23). கர்ப்பிணியாக இருந்த இவர் கடந்த 22-ந் தேதி பிரசவத்துக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  இவருக்கு கடந்த 24-ந் தேதி அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. 
அப்போது ராஜகுமாரியின் உடல்நிலை மோசமானதால் அவர் குழந்தையுடன் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு ராஜகுமாரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் (சனிக்கிழமை) ராஜகுமாரி பரிதாபமாக இறந்தார். அவருக்கு பிறந்த பெண் குழந்தைக்கு தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
சாலை மறியல்
இந்தநிலையில் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதன் விளைவாக தான் ராஜகுமாரி இறந்து விட்டதாக கூறி அவரது உறவினர்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக சி.பி.ஐ.. (எம்.எல்) கட்சி சார்பில் அறிவித்தனர். 
அதன்படி நேற்று காலை இறந்த ராஜகுமாரியின் உறவினர்களுடன் சி.பி.ஐ. (எம்.எல்) கட்சியினர் அரசு மருத்துவமனை நோக்கி கோஷமிட்டபடி வந்தனர்.  அவர்களை காந்திஜி சாலை- அரசு மருத்துவமனை சாலை சந்திப்பில் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதைத்தொடர்ந்து அவர்கள் சாலையில் அமர்ந்து கோஷமிட்டபடி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சு வார்த்தை
 இது குறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை உதவி கலெக்டர் பாலாஜி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம்  பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். 
இதனால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது. மேலும் பெண் இறந்த சம்பவம் குறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story