கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களை அமைச்சர் ஆய்வு


கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களை அமைச்சர் ஆய்வு
x
தினத்தந்தி 30 May 2021 11:25 PM IST (Updated: 30 May 2021 11:25 PM IST)
t-max-icont-min-icon

பேச்சிப்பாறை அணை பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு செய்தார்.

நாகர்கோவில்:
பேச்சிப்பாறை அணை பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு செய்தார்.
அமைச்சர் ஆய்வு
குமரி மாவட்டத்தில் கனமழை காரணமாக பேச்சிப்பாறை பகுதியில் பழுதடைந்த சாலைகள் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ள மலைவாழ் மக்களை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
குமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கனமழையினால் பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் உயர்ந்ததால் பொதுப்பணித்துறையினரால் உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இதனால் பேச்சிப்பாறை அணையின் (மார்த்தாண்டம் முதல் பேச்சிப்பாறை வரையிலான சாலை) மறுகால் பகுதியிலுள்ள சாலையில் உடைப்பு ஏற்பட்டு சேதமடைந்தது. இதைத் தொடர்ந்து அங்கு சாலையை சீரமைக்கும் பணியினை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடித்து வாகனங்கள் செல்வதை உறுதிப்படுத்திட நெடுஞ்சாலைத் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
நிரந்தர தீர்வு
அதோடு நிரந்தர  தீர்வுக்காக ரூ.50 லட்சம் செலவில் தடுப்புசுவர் மற்றும் சாலைகளை சீரமைத்திட திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்படும். தற்போது 2 நாட்கள் வெயிலின் காரணமாக தண்ணீர் வடிந்து இயல்புநிலை திரும்பிவிட்டது. கனமழையினால் பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்கும் வகையில் மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ் பகுதியாக சேதமடைந்த கூரை வீடு ஒன்றிற்கு ரூ.4100 வீதமும் மற்றும் முழுமையாக சேதமடைந்த கூரை வீடு ஒன்றிற்கு ரூ.5000 வீதமும் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.
எனினும் இந்த நிவாரண நிதி அவர்களுக்கு வீடுகளை சரிசெய்ய போதுமானதாக இருக்காது என்பதனால் தான் இலவசவீடு திட்டத்தின் கீழ் அவர்களுக்கு முழு முன்னுரிமை வழங்க வேண்டும் என கூறப்பட்டு உள்ளது. மேலும் கனமழையினால் பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெற்று அவர்களுக்கு புதிய குடியிருப்புகள் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத் தொடர்ந்து அணை மறுகால் பகுதியில் கனமழையினால் முழுமையாக சேதமடைந்த வீட்டினை நேரில் பார்வையிட்டதோடு அவர்களுக்கு வழிப்பாதையுடன் கூடிய பட்டா வழங்கிட அறிவுறுத்தினார். பேச்சிப்பாறை அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி மற்றும் குலசேகரம் திருநந்திக்கரை அரசு உயர்நிலைப்பள்ளி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். ஆய்வின் போது பொதுப்பணித்துறை (நெடுஞ்சாலை) செயற்பொறியாளர் பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story