மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியது வாலிபர் பலி மனைவி படுகாயம் வாகன சோதனையில் இருந்து தப்ப குறுக்கு வழியில் சென்றபோது பரிதாபம்
நன்னிலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் இறந்தார். அவருடைய மனைவி படுகாயம் அடைந்தார். வாகன சோதனையில் இருந்து தப்ப குறுக்கு வழியில் சென்றபோது இந்த விபத்து நடந்து இருப்பது பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
நன்னிலம்:-
நன்னிலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் இறந்தார். அவருடைய மனைவி படுகாயம் அடைந்தார். வாகன சோதனையில் இருந்து தப்ப குறுக்கு வழியில் சென்றபோது இந்த விபத்து நடந்து இருப்பது பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
குறுக்கு வழியில் பயணம்
திருவாரூர் அருகே உள்ள எண்கண் கீழகாலனி பகுதியை சேர்ந்தவர் அழகுசுந்தரம் (வயது28). சென்னையில் தனியார் நிறுனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி சரண்யா (25). இவர்களுக்கு திருமணமாகி 6 மாதங்கள் ஆகின்றன.
நேற்று அழகுசுந்தரம் தனது மனைவியுடன் நன்னிலம் அருகே வண்டாம்பாளை கிராமத்தில் உள்ள தனது மாமனார் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். ஊரடங்கு என்பதால் ஆங்காங்கே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில் அழகுசுந்தரம், மணக்கால் வழியாக குறுக்கு வழியில் வண்டாம்பாளை நோக்கி மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றார்.
கணவன் சாவு
மணக்கால்- கங்களாஞ்சேரி சாலையில் நீலக்குடியில் உள்ள மத்திய பல்கலைக்கழகம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த ஒரு லாரி, மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் அழகுசுந்தரம், சரண்யா ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர். ஆபத்தான நிலையில் இருந்த இருவரையும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மற்றும் நன்னிலம் போலீசார் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அழகுசுந்தரம் பரிதாபமாக இறந்தார். அவருடைய மனைவி சரண்யா, மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
லாரியை மடக்கினர்
இதற்கிடையே விபத்து குறித்து தகவல் அறிந்த நன்னிலம் தனிப்பிரிவு போலீஸ் ஏட்டு சீனிவாசன் மற்றும் நெடுஞ்சாலைத்துறை ரோந்து போலீசார் மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரியை விரட்டி சென்றனர்.
குடவாசல் அருகே அந்த லாரியை போலீசார் மடக்கினர். அதன் டிரைவர் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள அம்மலூர் தெற்கு தெருவை சேர்ந்த சுரேஷ் (35) என்பவரை போலீசார் கைது செய்து, லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக நன்னிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது விபத்தில் வாலிபர் இறந்தது அந்த பகுதியை சேர்ந்த மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story