புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 5 பேர் சாவு புதிதாக 330 பேருக்கு தொற்று


புதுக்கோட்டை மாவட்டத்தில்  கொரோனாவுக்கு மேலும் 5 பேர் சாவு புதிதாக 330 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 30 May 2021 6:19 PM GMT (Updated: 30 May 2021 6:19 PM GMT)

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 5 பேர் இறந்தனர். புதிதாக 330 பேருக்கு தொற்று உறுதியானது.

புதுக்கோட்டை:
330 பேருக்கு தொற்று
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களுக்கு முன்பு இருந்து 400-ஐ தாண்டியபடி இருந்தது. இந்த நிலையில் சற்று தொற்று எண்ணிக்கை குறைய தொடங்கி உள்ளது. அரசின் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட பட்டியலில் மாவட்டத்தில் புதிதாக 330 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 
இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மாவட்டத்தில் 22 ஆயிரத்து 521 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 238 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 18 ஆயிரத்து 241 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் கொரோனாவுக்கு தற்போது 4 ஆயிரத்து 76 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
5 பேர் சாவு
இந்த நிலையில் கொரோனா தொற்றில் புதுக்கோட்டை, திருச்சி, மதுரையில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 33 வயது வாலிபர், 62 வயது முதியவர், 80 வயது முதியவர் மற்றும் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 50 வயது ஆண், 60 வயது மூதாட்டி ஆகிய 5 பேர் இறந்தனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 204 ஆக உயர்ந்துள்ளது.
ஆதனக்கோட்டை
இதில் ஆதனக்கோட்டை சுகாதார நிலைய வட்டாரத்திற்குட்பட்ட பழனியப்பா நகரை சேர்ந்த ஆண் ஒருவர் கொரோனாவுக்கு பலியானார். இதனால் ஆதனக்கோட்டை சுகாதார நிலைய வட்டாரத்தில் கொரோனா தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 12 பேருக்கு தொற்று உறுதியானதால் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், தனியார் மருத்துவமனையிலும், ஒரு சிலர் வீட்டிலும் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். 
 இதனால் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்த நிலையில், 254 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 365 ஆக உயர்ந்துள்ளது.
அரிமளம்
அரிமளம் ஒன்றியம், ஏம்பல், கீழாநிலைக்கோட்டை, கடியாபட்டி, ராயவரம் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களில் உட்பட்ட பகுதிகளில் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Next Story