மனைவி இறந்தது தெரியாமல் பிணத்துடன் 24 மணி நேரம் வசித்த முதியவர்
நாகர்கோவிலில் வயதான மனைவி இறந்தது கூட தெரியாமல் 24 மணி நேரத்துக்கு மேலாக பிணத்துடன் முதியவர் வசித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் வயதான மனைவி இறந்தது கூட தெரியாமல் 24 மணி நேரத்துக்கு மேலாக பிணத்துடன் முதியவர் வசித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஓட்டல் ஊழியர்
நாகர்கோவில் கிருஷ்ணன்கோவிலை சேர்ந்த ஓட்டல் ஊழியருக்கு, மனைவி மற்றும் 2 மகன்கள், ஒரு மகள் உண்டு. தொழிலாளிக்கு 78 வயதும், அவரது மனைவிக்கு 68 வயதும் ஆகிறது. 2 மகன்களில் ஒரு மகன் விபத்தில் உயிரிழந்தார். மற்றொரு மகன் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை. மகளை செண்பகராமன்புதூர் அருகே திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.
இங்குள்ள வீட்டில் வயது முதிர்ந்த நிலையில் கணவன், மனைவி இருவரும் தனியாக வசித்து வந்தனர். அவ்வப்போது மகள் தான் வந்து பெற்றோரை கவனித்து வந்தார். தற்போது கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக தளர்வுகளற்ற ஊரடங்கு அமலில் இருப்பதால் கடந்த சில நாட்களாக அவருடைய மகளும் வரவில்லை.
மூதாட்டி பிணம்
இந்த நிலையில் கடந்த இரு நாட்களாக இவர்களது வீடு திறக்கப்பட வில்லை. வீட்டுக்குள் எந்த சத்தமும் கேட்க வில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் நேற்று முன் தினம் காலை அந்த பகுதியில் கொரோனா தடுப்பு பணிக்காக வந்த மாநகராட்சி தற்காலிக பெண் பணியாளர்களிடம் கூறினர்.
இதையடுத்து பெண் பணியாளர்கள் நீண்ட நேரமாக கதவை தட்டிய பின், முதியவர் வந்து கதவை திறந்தார். வாசலில் நின்று கொண்டிருந்த பெண் பணியாளர்களை பார்த்தவர், தரையில் கிடந்த தனது மனைவியை காட்டி, ‘நானும் ரொம்ப நேரமாக எழுப்புகிறேன். எனது மனைவி எழுந்திருக்கவே இல்லை’ என கூறினார். சந்தேகம் அடைந்த மாநகராட்சி பெண் பணியாளர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்த போது மூதாட்டி பிணமாக கிடந்தது தெரியவந்தது.
பெரும் சோகம்
ஏற்கனவே உடல் நிலை சரியில்லாமல் இருந்த மூதாட்டி இறந்து 24 மணி நேரத்துக்கு மேல் ஆகியிருப்பது தெரிய வந்தது. மனைவி இறந்தது கூட தெரியாமல், கணவரும் அவர் உறங்குகிறார் என்று நினைத்துக்கொண்டு கதவை திறக்காமல் உள்ளேயே இருந்துள்ளார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் முதியவரின் மகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் விரைந்து வந்து நடந்த சம்பவங்களை அறிந்து கதறி அழுதார். தொடர்ந்து இறந்த தாயாருக்கு இறுதி சடங்கு நிறைவேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story