கோவை நீலகிரி உள்பட 5 மாவட்ட கலெக்டர்களுடன் மு க ஸ்டாலின் ஆய்வு
கொரோனா பரவலை தடுக்க கோவை,நீலகிரி உள்பட 5 மாவட்ட கலெக்டர்களுடன் முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் ஆய்வு நடத்தினார். அப்போது அவர் தடுப்பு பணிகளை தீவிரமாக செயல்படுத்த உத்தரவிட்டார்.
கோவை
கொரோனா பரவலை தடுக்க கோவை,நீலகிரி உள்பட 5 மாவட்ட கலெக்டர்களுடன் முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் ஆய்வு நடத்தினார். அப்போது அவர் தடுப்பு பணிகளை தீவிரமாக செயல்படுத்த உத்தரவிட்டார்.
முதல்-அமைச்சர் ஆய்வு
கோவை மாவட்டம் கொரோனா பரவலில் மாநில அளவில் முதலிடத்தில் உள்ளது. அதுபோன்று நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களிலும் தொற்று அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம், கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது.
இந்த ஆய்வுக்கூட்டத்தில், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அர.சக்கரபாணி, ராமச்சந்திரன் மற்றும் 5 மாவட்ட கலெக்டர்கள் நாகராஜன் (கோவை), இன்னசென்ட் திவ்யா (நீலகிரி), விஜய கார்த்திகேயன் (திருப்பூர்), கதிரவன் (ஈரோடு), கார்மேகம் (சேலம்) மற்றும் 5 மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கலெக்டர்களுக்கு உத்தரவு
கூட்டத்தில், கோவை மாவட்டம் உள்பட 5 மாவட்டங்களிலும் கொரோனா பரவலை தடுக்க தடுப்பு பணிகளை தீவிரமாக செயல்படுத்த வேண்டும், தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று கலெக்டர்களுக்கு முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
முன்னதாக கோவை மாநகராட்சி பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் களை விரைந்து சிகிச்சைக்கு அழைத்து செல்லும் வகையில் 50 கார் ஆம்புலன்ஸ் சேவை திட்டம் தொடக்க நிகழ்ச்சி கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் நடந்தது.
மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கொடியசைத்து கார் ஆம்புலன்ஸ் சேவை திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அர.சக்கரபாணி, கா.ராமச் சந்திரன், முதல்-அமைச்சரின் தனி செயலாளர் உமாநாத், கோவை மாவட்ட கலெக்டர் நாகராஜன், மாநகராட்சி ஆணையாளர் குமரவேல், பாண்டியன், இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி டீன் ரவீந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர் மாலை 6.45 மணிக்கு கோவையில் இருந்து மு.க.ஸ்டாலின், தனி விமானம் மூலம் சென்னை புறப்பட்டு சென்றார். அவரை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story