கொல்லிமலை சாலையில் சேதமடைந்த இரும்பு தடுப்புகள்; சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
கொல்லிமலை சாலையில் சேதமடைந்த நிலையில் இருக்கும் இரும்பு தடுப்புகளை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேந்தமங்கலம்:
கொல்லிமலை
நாமக்கல் மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலமாக கொல்லிமலை விளங்குகிறது. இங்கு இயற்கை எழில் கொஞ்சும் சூழலை கண்டு ரசிப்பதற்காகவே சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்வார்கள். மேலும் அவர்கள் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் குளித்தும், வரலாற்று புகழ் வாய்ந்த அரப்பளீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தும் செல்வார்கள்.
கொல்லிமலையில் 100-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இவற்றில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இவர்களின் முக்கிய தொழில் விவசாயம் ஆகும். காபி, மிளகு போன்ற பயிர்களும் அங்கு சாகுபடி செய்யப்படுகின்றன. இவை வியாபாரிகளால் மொத்தமாக வாங்கி செல்லப்பட்டு பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சுற்றுலா பயணிகளுக்கு தடை
கொல்லிமலைக்கு செல்ல அடிவாரத்தில் இருந்து காரவள்ளி, முள்ளுக்குறிச்சி உள்பட 4 வழிகள் உள்ளன. இதில் காரவள்ளியில் இருந்து மலைக்கு செல்லும் சாலை பிரதான சாலையாக விளங்கி வருகிறது. இந்த சாலை வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. காரவள்ளியில் இருந்து 70 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து கொல்லிமலைக்கு செல்ல வேண்டும்.
தற்போது கொரோனா பரவல் காரணமாக கொல்லிமலைக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்துள்ளது. இதனால் வனத்துறையினர் மற்றும் போலீசார் சுற்றுலா பயணிகள் செல்லாத வகையில் அங்கு தடுப்புகள் அமைத்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கோரிக்கை
இதனிடையே தற்போது விபத்துகளை தடுப்பதற்காக கொல்லிமலை சாலையில் உள்ள கொண்டை ஊசி வளைவுகள் மற்றும் ஆபத்தான பகுதிகளில் வனத்துறை சார்பில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் 35-வது கொண்டை ஊசி வளைவில் இரும்பு தடுப்புகள் சேதமடைந்து, சரிந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளதால் தடுப்புகளை சீரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், காரவள்ளியில் இருந்து கொல்லிமலைக்கு செல்லும் சாலையில் சில இடங்களில் இரும்பு தடுப்புகள் சேதமடைந்த நிலையில் உள்ளது இதனால் மலையில் செல்லும் போது, பாதுகாப்பற்ற சூழல் உருவாகியுள்ளது. மேலும் இரவு பயணத்தின் போது விபத்துகள் ஏற்படும் நிலையும் உள்ளது.
எனவே விபத்துகள் ஏற்படும் முன், சேதமடைந்த இரும்பு தடுப்புகளை சீரமைக்க வேண்டும். மேலும், 30 கிலோ மீட்டர் நீளம் கொண்ட சாலையில் மழைக்கு பொதுமக்கள் நின்று செல்ல வசதியாக குறைந்த பட்சம் 2 இடங்களிலாவது நிழற்கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story