களக்காடு அருகே அரசப்பத்து குளம் மறுகால் உடைப்பு சீரமைக்கப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு


களக்காடு அருகே  அரசப்பத்து குளம் மறுகால் உடைப்பு சீரமைக்கப்படுமா?  விவசாயிகள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 30 May 2021 6:53 PM GMT (Updated: 30 May 2021 6:53 PM GMT)

களக்காடு அருகே அரசப்பத்து குளம் மறுகால் உடைப்பு சீரமைக்கப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

களக்காடு:
களக்காடு அருகே அரசப்பத்து குளம் மறுகால் உடைப்பு சீரமைக்கப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர். 

மறுகாலில் உடைப்பு

களக்காடு அருகே மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அரசப்பத்து குளம் உள்ளது. இந்த குளத்தின் மூலம் 500 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 

இந்த குளத்தில் மறுகால் பாய்ந்து வரும் தண்ணீர் பச்சையாறு அணையில் இருந்து தேங்காய் உருளி சிற்றருவிக்கு செல்லும் சாலை வழியாக வந்து, அணையின் ஊட்டு கால்வாயில் சென்று சேரும் வகையில் உள்ளது.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசப்பத்து குளத்தின் மறுகாலில் உடைப்பு ஏற்பட்டது. அந்த உடைப்பு சீர்செய்யப்படாமல் இருந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு களக்காடு பகுதியில் பெய்த தொடர் மழையால் அரசப்பத்து குளம் நிரம்பி, மறுகாலில் தண்ணீர் சீறிப்பாய்ந்து ஓடியது. இதனால் மறுகாலில் ஏற்கனவே உடைப்பு ஏற்பட்ட பகுதியில் மேலும் அதிகளவில் உடைந்து அங்கு பல அடி ஆழத்துக்கு பள்ளமும் ஏற்பட்டு உள்ளது.

விவசாயிகள் எதிர்பார்ப்பு

மேலும் மழை பெய்தால் உடைப்பு இன்னும் அதிகரித்து அருகில் உள்ள தேங்காய் உருளி சாலை துண்டிக்கப்படும் நிலை உள்ளது. அவ்வாறு சாலை துண்டிக்கப்பட்டால் மலையடிவாரத்தில் உள்ள 300 ஏக்கர் விளைநிலங்களுக்கு செல்ல விவசாயிகளுக்கு மாற்றுப்பாதை இல்லை. இதனால் விவசாயிகள் தங்களது விளைநிலங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்படும். 

எனவே பொதுப்பணித்துறையினர் அரசப்பத்து குளத்தின் மறுகால் உடைப்பை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா? என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர். 

Next Story