குவாரி அமைத்து, மாட்டுவண்டிகளில் மணல் அள்ள அனுமதிக்க தொழிலாளர்கள் கோரிக்கை


குவாரி அமைத்து, மாட்டுவண்டிகளில் மணல் அள்ள அனுமதிக்க தொழிலாளர்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 31 May 2021 12:55 AM IST (Updated: 31 May 2021 12:55 AM IST)
t-max-icont-min-icon

குவாரி அமைத்து, மாட்டுவண்டிகளில் மணல் அள்ள அனுமதிக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தா.பழூர் கொள்ளிடம் ஆற்றுப்படுகைகளில்
குவாரி அமைத்து, மாட்டுவண்டிகளில் மணல் அள்ள அனுமதிக்க வேண்டும்
தொழிலாளர்கள் கோரிக்கை
தா.பழூர், மே.31-
தா.பழூரையொட்டி உள்ள கொள்ளிடம் ஆற்றுப்படுகைகளில் குவாரி அமைத்து, மாட்டு வண்டிகளில் மணல் அள்ள அனுமதிக்க வேண்டும் என்று மாட்டு வண்டி தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாட்டுவண்டி தொழிலாளர்கள்
அரியலூர் மாவட்டம் தா.பழூர், ஜெயங்கொண்டம், உடையார்பாளையம், ஆண்டிமடம், மீன்சுருட்டி ஆகிய பகுதிகளில் ஏராளமான மாட்டுவண்டி தொழிலாளர்கள் உள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி வீடுகள் வழங்கும் திட்டம், பசுமை வீடுகள் திட்டம் ஆகியவற்றில் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான வீடுகளின் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதேபோல் பல்வேறு தனியார் கட்டிட கட்டுமான பணிகள், அரசு சார்ந்த கட்டுமான பணிகள் என பல்வேறு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.
தா.பழூரை அடுத்த மதனத்தூர் கொள்ளிடம் ஆற்றுப் படுகையில் கடந்த 2019-ம் ஆண்டு வரை மணல் குவாரி செயல்பட்டு வந்தது. அப்போது கனரக வாகனங்களில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, கரூர், சேலம், கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு இங்கிருந்து மணல் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இங்கு உள்ளூர் மாட்டுவண்டி தொழிலாளர்களுக்கு மணல் அள்ள அனுமதி கிடைக்கவில்லை. அப்போது தஞ்சாவூர் மாவட்டம் நீலத்தநல்லூர் மாட்டுவண்டி மணல் குவாரியில் இருந்து மாட்டுவண்டி தொழிலாளர்கள் மணல் ஏற்றி வந்து, தங்களது வாழ்க்கையை நடத்தி வந்தனர்.
அதிக விலைக்கு விற்பனை
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அரியலூர் மாவட்ட மாட்டுவண்டி தொழிலாளர்கள் நீலத்தநல்லூர் பகுதி குவாரியில் மணல் அள்ளுவதற்கு அப்பகுதி மக்கள் அனுமதி மறுத்து வருகின்றனர். இதனால் அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் கட்டுமானப் பணிகளுக்கு தேவையான மணலை இருசக்கர வாகனங்களிலும், மாட்டு வண்டிகளிலும் மிகுந்த சிரமத்திற்கு இடையே அரசு அனுமதியின்றி தொழிலாளர்கள் கொண்டு வந்து கட்டுமானப்பணிகள் தடைபடாமல் நடப்பதற்கு உதவி வந்தனர். ஆனாலும் அரசு அனுமதி இல்லாமல் மணல் அள்ளுவது சட்டவிரோதம் என்பதால் அதிகாரிகள் மாட்டுவண்டி தொழிலாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்து வருகின்றனர்.
நான்கு நாட்கள் மாட்டு வண்டிகளை பயன்படுத்தி வருமானம் பெறுவதும், பின்னர் ஒரேநாளில் அதிகாரிகளிடம் சிக்கி அரசுக்கு அபராதம் செலுத்தி மாட்டு வண்டிகளை மீட்பதுமாகவே மாட்டுவண்டி தொழிலாளர்களின் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது. உரிய அனுமதி இல்லாமல் மணல் விற்பனை நடைபெறுவதால் கட்டுமான பணிகளுக்கான மணலின் விலை கட்டுக்கடங்காமல் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
கோரிக்கை
வேறு எதுவும் தொழில் இல்லாத நிலையில் கொள்ளிடம் ஆற்றுப் படுகைகளை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மாட்டுவண்டி தொழிலாளர்களுக்கு அரசு முறைப்படி அனுமதி வழங்கி மணல் குவாரியை உருவாக்க வேண்டும் என்று மாட்டுவண்டி தொழிலாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அதற்கு அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணம் மற்றும் விற்பனை செய்ய வேண்டிய விலை ஆகியவற்றை அரசே நிர்ணயம் செய்து தரவேண்டும். விவசாய மற்றும் கட்டுமான பணிகள் தொய்வில்லாமல் நடைபெறவும், அதேநேரத்தில் அரசுக்கு வருவாய் ஈட்டும் வகையிலும், மாட்டு வண்டிகளை மட்டுமே நம்பி வாழ்க்கையை நடத்தும் ஏழை மாட்டுவண்டி தொழிலாளர்களின் வாழ்வில் அரசு விளக்கேற்றி வைக்க வேண்டும் என்று மாட்டுவண்டி தொழிலாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.அண்டை மாவட்டங்களான கடலூர், தஞ்சை மாவட்டங்களில் மாட்டுவண்டி மணல் குவாரி அமைக்கப்பட்டு அப்பகுதி மாட்டுவண்டி தொழிலாளர்களுக்கு சட்டப்பூர்வமாக மணல் அள்ள அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் அரியலூர் மாவட்டத்திலும் மணல் விற்பனையை வரைமுறைப்படுத்த வேண்டும். கொரோனா பெருந்தொற்று பல்வேறு தொழில்களை முடக்கம் அடையச் செய்து மக்களின் வாழ்வாதாரத்தை பாதித்துள்ள நிலையில் உடனடியாக கட்டுமானத் தொழிலும், விவசாயமும் செழித்தோங்க குவாரி அமைத்து, மாட்டுவண்டி தொழிலாளர்களுக்கு மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதி வழங்கி, அவர்களின் வாழ்வாதாரத்தை மீட்க அதிகாரிகள் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Next Story