மாவட்ட செய்திகள்

சூறைக்காற்றால் சாய்ந்த மரங்களை அதிகாரிகள் ஆய்வு + "||" + Authorities inspect trees uprooted by the storm

சூறைக்காற்றால் சாய்ந்த மரங்களை அதிகாரிகள் ஆய்வு

சூறைக்காற்றால் சாய்ந்த மரங்களை அதிகாரிகள் ஆய்வு
தினத்தந்தி செய்தி எதிரொலியாக சூறைக்காற்றால் சாய்ந்த மரங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
ஆண்டிமடம்:
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள அகரம் கிராமத்தில் ஏராளமான விவசாயிகள் முந்திரி சாகுபடி செய்து வருகின்றனர். இங்குள்ள விவசாயிகள் சுமார் 500-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தில் காலம், காலமாக முந்திரி சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அகரம் கிராமத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக முந்திரி மரங்கள் வேரோடும், முற்றிலும் முறிந்தும் கீழே சாய்ந்தது. இதனால் விவசாயிகள் மனவேதனை அடைந்தனர்.
இதுகுறித்து தினத்தந்தியில் நேற்று செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக நேற்று தோட்டக்கலை துணை இயக்குனர் ஆனந்தனின் அறிவுறுத்தலின்பேரில் ஆண்டிமடம் தாசில்தார் முத்துகிருஷ்ணன், ஆண்டிமடம் தோட்டக்கலை உதவி இயக்குனர் பிரவீன்குமார், தோட்டக்கலை துணை அலுவலர் ராஜேந்திரன், தோட்டக்கலை உதவி அலுவலர் பெருமாள் ஆகியோர் அகரம் கிராமத்தில் சூறாவளி காற்றால் சாய்ந்து சேதமடைந்த முந்திரி, பலா, மா, வேம்பு ஆகிய மரங்களை ஆய்வு செய்தனர். மேலும் 70-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் பெயர் விவரங்களை பெற்றுக்கொண்டு, இது குறித்து மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிச் சென்றனர். அப்போது வருவாய் அலுவலர் (பொறுப்பு) அசோக்குமார், கிராம நிர்வாக அலுவலர் அருண் மற்றும் விவசாயிகள் உடனிருந்தனர்.