கிராவல் மண் லாரிகளை மறித்து பொதுமக்கள் போராட்டம்


கிராவல் மண் லாரிகளை மறித்து பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 31 May 2021 1:02 AM IST (Updated: 31 May 2021 1:02 AM IST)
t-max-icont-min-icon

விக்கிரமங்கலம் அருகே கிராவல் மண் லாரிகளை மறித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விக்கிரமங்கலம்:

லாரிகளை மறித்து போராட்டம்
தஞ்சாவூரில் இருந்து விக்கிரவாண்டி வரை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணியையொட்டி அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள குணமங்கலம் கிராமத்தில் இருந்து சாலை விரிவாக்கத்திற்கு தேவையான கிராவல் மண் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளில் கோவிந்தபுத்தூர் வழியாக கும்பகோணம் பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இந்நிலையில் லாரிகளில் அதிக பாரம் ஏற்றிக்கொண்டு செல்வதாகவும், அப்போது சாலையில் சரிந்து விழும் கிராவல் மண்ணால் விபத்துகள் ஏற்படுவதாகவும், மேலும் கிராவல் மண்ணை ஏற்றிக்கொண்டு செல்லும்போது லாரிகள் அதிகவேகமாக செல்வதாகவும் கூறி, நேற்று கோவிந்தபுத்தூரில் அந்த வழியாக சென்ற லாரிகளை பொதுமக்கள் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, குறைகள் சரி செய்யப்படும் என்று உறுதி அளித்ததன்பேரில், பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர் இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் கனரக வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story