கீற்று முடையும் தொழிலை மீண்டும் முடக்கிய கொரோனா
தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் பகுதியில் கீற்று முடையும் தொழிலை கொரோனா மீண்டும் முடக்கி உள்ளது. ஊரடங்கால் கீற்றுகளை கொள்முதல் செய்ய வியாபாரிகள் வராததால் பெண்கள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.
சேதுபாவாசத்திரம் :
தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் பகுதியில் கீற்று முடையும் தொழிலை கொரோனா மீண்டும் முடக்கி உள்ளது. ஊரடங்கால் கீற்றுகளை கொள்முதல் செய்ய வியாபாரிகள் வராததால் பெண்கள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.
கீற்று முடையும் தொழில்
கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் 15-ந் தேதி வீசிய கஜா புயல் காரணமாக தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் பகுதியில் ஏராளமான தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்தன. தென்னையை மட்டுமே நம்பி இருந்த விவசாயிகளின் வாழ்க்கையை கஜா புயல் புரட்டி போட்டது. பெரும்பாலான வீடுகளில் பெண்களின் பிரதான சிறு தொழிலாக உள்ள கீற்று முடையும் தொழிலும் கஜா புயலுக்குப்பின் தொய்வடைந்த நிலையில் நடைபெற்று வந்தது.
சேதுபாவாசத்திரம் பகுதியில் தென்னந்தோப்புகளை குத்தகைக்கு எடுத்து அங்கு கிடைக்கும் தென்னை மட்டைகளை மொத்தமாக கொண்டு வந்து கீற்று முடைந்து, அவற்றை மொத்த வியாபாரிகளிடம் விற்பனை செய்வதை பெண்கள் சிறுதொழிலாக செய்து வந்த நிலையில் கஜா புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
பெண்களின் வாழ்வாதாரம்
ஏராளமான பெண்களின் வாழ்வாதாரமாக கீற்று முடையும் தொழில் உள்ளது. புயலுக்குப்பின் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வர தொடங்கிய கீற்று முடையும் தொழிலுக்கு கடந்த ஆண்டு (2020) கொரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு முட்டுக்கட்டை போட்டது.
ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டபோது கீற்று முடையும் தொழில் புத்துணர்ச்சியுடன் மீண்டு வந்த நிலையில் தற்போது கொரோனா 2-வது அலை காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு மீண்டும் அந்த தொழிலை முடக்கி உள்ளது.
பெண்கள் ஏமாற்றம்
கிராம பகுதிகளில் முடையும் கீற்றுகளை வியாபாரிகள் வாங்கி கட்டுக்கட்டாக கட்டி வேன்கள் மூலம் நாகப்பட்டினம், காரைக்கால், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, அறந்தாங்கி, ஆலங்குடி போன்ற பகுதிகளில் விற்பனை செய்து வந்தனர். தற்போது போக்குவரத்து இல்லாததால் வியாபாரிகள் கீற்றுகளை வாங்க சேதுபாவாசத்திரம் பகுதிக்கு வருவதில்லை.
இதனால் முடைந்து வைத்திருக்கும் கீற்று மட்டைகள் அனைத்தும் விற்பனையின்றி அவரவர் வீடுகளிலேயே தேங்கி கிடக்கிறது. இதன் காரணமாக கீற்று முடையும் தொழில் மீண்டும் முடங்கி உள்ளது. இந்த தொழிலை நம்பி குடும்பம் நடத்திவந்த பெரும்பாலான பெண்கள் வருமானமின்றி ஏமாற்றத்தில் உள்ளனர்.
Related Tags :
Next Story