ஈரோடு மாவட்டத்தில் குறையாத தொற்று பரவல்: இளம்பெண் - வாலிபர் உள்பட 22 பேர் கொரோனாவுக்கு பலி; ஒரேநாளில் 1,784 பேருக்கு பாதிப்பு


ஈரோடு மாவட்டத்தில் குறையாத தொற்று பரவல்: இளம்பெண் - வாலிபர் உள்பட 22 பேர் கொரோனாவுக்கு பலி; ஒரேநாளில் 1,784 பேருக்கு பாதிப்பு
x
தினத்தந்தி 31 May 2021 2:38 AM IST (Updated: 31 May 2021 2:38 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் இளம்பெண் மற்றும் வாலிபர் உள்பட 22 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். மேலும் ஒரே நாளில் 1,784 பேர் பாதிக்கப்பட்டு உள்ளார்கள்.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் இளம்பெண் மற்றும் வாலிபர் உள்பட 22 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். மேலும் ஒரே நாளில் 1,784 பேர் பாதிக்கப்பட்டு உள்ளார்கள்.
கொரோனா பாதிப்பு
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலை மெதுமெதுவாக குறைந்து வருகிறது. அதேசமயம் கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறையாமல் இருந்து வருவது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு கொரோனா தொற்றின் பாதிப்பு குறையும் என்கிற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் தொற்று பரவல் குறைந்தபாடில்லை.
கடந்த 22-ந் தேதி புதிதாக 1,758 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டது புதிய உச்சமாக இருந்து வந்தது. அதன்பிறகு 23-ந் தேதி 1,352 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து தினமும் மெதுவாக தொற்று பரவல் அதிகரித்த வண்ணம் இருந்தது. 24-ந் தேதி 1,467 பேருக்கும், 25-ந் தேதி 1,555 பேருக்கும், 26-ந் தேதி 1,642 பேருக்கும், 27-ந் தேதி 1,699 பேருக்கும், 28-ந் தேதி 1,731 பேருக்கும், நேற்று முன்தினம் 1,743 பேருக்கும் என கொரோனா தொற்றின் புதிய பாதிப்பு ஏறுமுகமாக உள்ளது.
புதிய உச்சம்
இந்தநிலையில் நேற்று மாலை மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட பட்டியலின்படி ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 1,784 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுவே மாவட்டத்தின் புதிய உச்சமாகும். மேலும், தமிழக அளவில் கோவை, சென்னைக்கு அடுத்தபடியாக ஈரோடு 3-வது இடத்தை பிடித்து உள்ளது.
தமிழகம் முழுவதும் தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவல் குறையாமல் இதுவரை இல்லாத வகையில் மீண்டும் புதிய உச்சத்தை எட்டுவது மக்களை பீதி அடைய செய்துள்ளது. குறிப்பாக கிராமப்புறங்களிலும் கொரோனா பாதிப்பு கோரத்தாண்டவமாடி வருகிறது. இதுவரை மொத்தம் 54 ஆயிரத்து 914 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு உள்ளார்கள். இதில் 39 ஆயிரத்து 367 பேர் குணமடைந்து உள்ளார்கள். நேற்று மட்டும் 941 பேர் கொரோனாவில் இருந்து மீண்டார்கள். சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் 15 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தற்போது வரை 15 ஆயிரத்து 207 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குறைந்த வயதினர் பலி
இதற்கிடையே கொரோனாவுக்கு மேலும் 22 பேர் பலியாகி உள்ளார்கள். அதிலும் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 30 வயது வாலிபர் 4-ந் தேதியும், 25 வயது பெண் கடந்த 20-ந் தேதியும் கொரோனாவுக்கு உயிரிழந்து உள்ளனர். குறைந்த வயதினரும் கொரோனா வைரசால் பலி ஆவது வேதனைக்குரியதாக உள்ளது. இதேபோல் 56 வயது பெண் கடந்த 6-ந் தேதியும், 66 வயது மூதாட்டி 10-ந் தேதியும், 69 வயது மூதாட்டி 11-ந் தேதியும், 60 வயது மூதாட்டி 12-ந் தேதியும், 65 வயது மூதாட்டி 13-ந் தேதியும், 53 வயது பெண் 14-ந் தேதியும், 57 வயது ஆண் 16-ந் தேதியும், 52 வயது ஆண், 78 வயது முதியவர் ஆகியோர் 17-ந் தேதியும், 50 வயது பெண் 19-ந் தேதியும், 50 வயது பெண் 20-ந் தேதியும், 49 வயது ஆண், 60 வயது மூதாட்டி ஆகியோர் 26-ந் தேதியும், 58 வயது ஆண், 65 வயது மூதாட்டி, 70 வயது முதியவர், 80 வயது மூதாட்டி ஆகியோர் 28-ந் தேதியும், 50 வயது ஆண், 50 வயது பெண் ஆகியோர் நேற்று முன்தினமும், 57 வயது ஆண் நேற்றும் கொரோனாவுக்கு பரிதாபமாக உயிரிழந்தார்கள். இதனால் ஈரோடு மாவட்டத்தில் மொத்த உயிரிழப்பு 340 ஆக உயர்ந்தது.

Next Story