பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஏ.ஐ.டி.யு.சி.யினர் மனு
பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஏ.ஐ.டி.யு.சி.யினர் மனு கொடுத்தனர்.
ஈரோடு
பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஏ.ஐ.டி.யு.சி.யினர் மனு கொடுத்தனர்.
தற்காலிக பணியாளர்கள்
ஈரோடு மாவட்ட மருத்துவத்துறை பணியாளர்கள் சங்கம் (ஏ.ஐ.டி.யு.சி.) சார்பில், ஈரோட்டுக்கு வந்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை மனு ஒன்று கொடுக்கப்பட்டது. அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:-
பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், தற்போது கிரிஸ்டல் மற்றும் பைவ் ஸ்டார் என்ற 2 தனியார் ஒப்பந்ததாரர்கள் மூலம் 300-க்கும் மேற்பட்டோர் தற்காலிக பணியாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். அவுட்சோர்சிங் முறையில் பணியமர்த்தப்பட்ட இவர்கள் ஓராண்டு முதல் சுமார் 15 ஆண்டுகள் வரை தொடர்ச்சியாக பணிபுரிந்து வருகின்றனர்.
குறைந்தபட்ச ஊதியம்
இதில் ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர்கள், இருபால் மருத்துவ உதவியாளர்கள், தூய்மை பணியாளர்கள், தோட்ட பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பணியாளர்களும் அடங்குவர்.
இவர்கள் தவிர டிப்ளமோ பயிற்சி முடித்த பணியாளர்கள் 30-க்கும் மேற்பட்டோர் 2 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை மருத்துவமனை நிர்வாகத்தின் கீழ் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்களுக்கு அதிகபட்சமாக மாதம் ரூ.12 ஆயிரம் வரையான ஊதியமே வழங்கப்படுகிறது. மேற்கண்ட தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ் தமிழக அரசால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்த பட்ச ஊதியம் கூட வழங்கப்படுவதில்லை.
பணி நிரந்தரம்
அரசு நிர்ணயித்த குறைந்த பட்ச ஊதியத்தை விடக் குறைவான ஊதியத்தை தமிழ்நாடு மருத்துவ சேவைகள் நிறுவனம் நிர்ணயித்துள்ளது. அதையும் கூட ஒப்பந்ததாரர்கள் நிறுவனம் முறையாக வழங்காமல் சட்டவிரோதமாக பிடித்தம் செய்து கொள்கின்றனர். அதாவது, பி.எப்., இ.எஸ்.ஐ. உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கு நிர்வாகம் செலுத்த வேண்டிய பங்கு தொகையையும் தொழிலாளர்களிடமே பிடித்தம் செய்து வருகின்றனர். அதோடு, பிடித்தம் செய்யப்பட்ட தொகைகளையும் அரசுத்துறைகளுக்கு முறையாக செலுத்துவதில்லை.
இவர்களுக்கு பிடித்தங்கள் போக நாள் ஒன்றுக்கு ரூ.300 மட்டுமே ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும், சட்டப்பூர்வமான நலன்களும் முறையாக வழங்கப்படுவதில்லை. இதனால் இத்தொழிலாளர்கள் வாழ்க்கை நடத்தவே மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். எனவே பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.
Related Tags :
Next Story