பெருந்துறை கொரோனா சிறப்பு மையத்துக்கு 14 மணி நேரத்தில் மின்சார இணைப்பு- அதிகாரிகளுக்கு பாராட்டு
பெருந்துறை கொரோனா சிறப்பு மையத்துக்கு 14 மணி நேரத்தில் மின்சார இணைப்பு வழங்கிய அதிகாரிகளுக்கு பலர் பாராட்டு தெரிவித்தனர்.
ஈரோடு
பெருந்துறை கொரோனா சிறப்பு மையத்துக்கு 14 மணி நேரத்தில் மின்சார இணைப்பு வழங்கிய அதிகாரிகளுக்கு பலர் பாராட்டு தெரிவித்தனர்.
14 மணிநேரம்
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள கூடுதல் ஆக்சிஜன் வசதியுடனான படுக்கை வளாகத்துக்கு மின்சார இணைப்பு கேட்டு விண்ணப்பிக்கப்பட்டு இருந்தது. அதன் அடிப்படையில் ஈரோடு மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் இந்திராணி தலைமையிலான அதிகாரிகள் 14 மணி நேரத்தில் சிகிச்சை மையத்துக்கான மின்சார இணைப்பினை வழங்கினார்கள். அவர்களுக்கு அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் நேற்று பாராட்டு தெரிவித்தனர்.
இதுபற்றி ஈரோடு மின்பகிர்வான வட்ட மேற்பார்வை பொறியாளர் இந்திராணி கூறியதாவது:-
பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ள படுக்கை வளாகத்துக்கு மின்சார இணைப்பு வழங்க அமைச்சர் சு.முத்துசாமி, மாவட்ட கலெக்டர் கதிரவன் ஆகியோர் உத்தரவிட்டனர்.
தடையில்லா மின்சாரம்
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜியின் ஆலோசனை பெற்று மின் இணைப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஏற்கனவே அங்கு இருந்த கட்டமைப்புகள் மூலம் மின்சார நீட்டிப்பு செய்ய முடியாத காரணத்தால் 250 கிலோ வாட் சக்தி கொண்ட 2 மின்மாற்றிகள் மற்றும் 5 புதிய மின்கம்பங்கள் நடப்பட்டன. மொத்தம் 14 மணி நேரத்தில் மின்சார இணைப்பு வழங்கப்பட்டது. தற்போதைய சூழலில் கூடுதலாக 500 படுக்கைகள் அமைத்தாலும் மின்சார இணைப்பு உடனடியாக வழங்கும் வகையில் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இதுபோல் பெருந்துறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு 24 மணி நேரமும் தடை இல்லாத மின் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது.
இதுமட்டுமின்றி தற்போதைய பேரிடர் காலத்தில் மக்கள் நலன் கருதி அரசு எடுத்து வரும் முயற்சிகளுக்கு உறுதுணையாக தடையில்லாத வகையில் சீரான மின்சாரம் வழங்க தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவுறுத்தலின்படி அனைத்து நடவடிக்கைகளையும் மின்சார வாரியம் எடுத்து வருகிறது.
இவ்வாறு ஈரோடு மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் இந்திராணி கூறினார்.
Related Tags :
Next Story