சேலம் மத்திய சிறையில் 4 கைதிகள்-25 போலீசாருக்கு கொரோனா


சேலம் மத்திய சிறையில் 4 கைதிகள்-25 போலீசாருக்கு கொரோனா
x
தினத்தந்தி 30 May 2021 10:05 PM GMT (Updated: 30 May 2021 10:05 PM GMT)

4 கைதிகள்-25 போலீசாருக்கு கொரோனா

சேலம்:
சேலம் மத்திய சிறையில் 4 கைதிகள் மற்றும் 25 போலீசாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
சிறை
சேலம் மத்திய சிறையில் தற்போது தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் என 900 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். அதாவது சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சேலம் மத்திய சிறையில் கைதிகள் கொண்டு வந்து அடைக்கப்படுகின்றனர்.
தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதால் கைதிகளுக்கு பரிசோதனை முடிந்து தொற்று இல்லை (நெகட்டிவ்) சான்றிதழ் கொண்டு வந்தால் மட்டுமே சேலம் மத்திய சிறையில் கைதிகள் அடைக்கப்படுகின்றனர்.
கைதிகள், போலீசாருக்கு கொரோனா
ஆனால் பல கெடுபிடிகளுக்கு மத்தியிலும் சேலம் மத்திய சிறையில் தற்போது 4 கைதிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறது. இவர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தற்போது சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த கைதிகளை தவிர சிறை காவலர்கள் 25 பேருக்கும் வைரஸ் தொற்று தற்போது ஏற்பட்டுள்ளது.
இவர்களில் பெரும்பாலானோர் தங்களது வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்கிறோம் என தெரிவித்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது. தொற்று பாதித்த சிறை காவலர்கள் 10 முதல் 20 நாட்கள் வரை விடுமுறை எடுத்து சென்று விடுகிறார்கள். ஆனால் இவர்களில் பலர் அரசு ஆஸ்பத்திரி அல்லது தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறாமல் வீட்டில் தனிமையில் இருந்து கொள்கிறேன் என தெரிவித்து விட்டு அவரவர் சொந்த ஊர்களுக்கு சென்று விடுவதாகவும் கூறப்படுகிறது. 
கட்டுப்பாடுகள்
தொற்று பாதித்து சிகிச்சை பெறாமல் சொந்த ஊர்களுக்கு சென்று தங்கி கொள்வதால் அந்த பகுதிகளிலும் கொரோனா பரவும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. சேலம் சிறை அதிகாரிகள் சிறை காவலர்களுக்கு பலமுறை எச்சரிக்கை விடுத்தும் பலர் சொந்த ஊர்களுக்கு செல்வதும், வருவதுமாக உள்ளனர். இவர்கள் மூலம் சிறை கைதிகளுக்கு தற்போது தொற்று பரவும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அனைத்து சிறை காவலர்களும் கட்டாயம் பணிக்கு வர வேண்டும். தொற்று பாதிப்பு யாருக்கும் உறுதி செய்யப்பட்டால் அவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை எடுக்க வேண்டும். சொந்த ஊர்களுக்கு செல்ல கூடாது. வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள விவரம் தெரிவிக்க வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகளை சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளர் தமிழ்ச்செல்வன் சிறை காவலர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.
மேலும், சேலம் மத்திய சிறையில் பணிக்கு வரும் அதிகாரிகள் மற்றும் சிறை காவலர்கள் அவ்வப்போது கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், தொற்று வந்தவர்கள் உடனே ஆஸ்பத்திரிக்கு சென்று சேர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
,,,,,,,,,,,

Next Story