சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் கொரோனா நோயாளிகளுக்கு உடனடி சிகிச்சைக்கு ஏற்பாடு


சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் கொரோனா நோயாளிகளுக்கு உடனடி சிகிச்சைக்கு ஏற்பாடு
x
தினத்தந்தி 30 May 2021 10:05 PM GMT (Updated: 30 May 2021 10:05 PM GMT)

கொரோனா நோயாளிகளுக்கு உடனடி சிகிச்சைக்கு ஏற்பாடு

சேலம்:
சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் கொரோனா நோயாளிகளுக்கு உடனடியாக சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. இதனால் நோயாளிகள் இனிமேல் ஆஸ்பத்திரி வாசலில் ஆம்புலன்சுகளில் காத்திருக்க வேண்டியது இல்லை.
சேலம் அரசு ஆஸ்பத்திரி
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் 966 படுக்கை வசதிகள் உள்ளன. மூச்சு திணறலால் வரும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் படுக்கை வசதிகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
ஆனால் நோய் பாதிப்பு அதிகரித்து வருவதால் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள அனைத்து ஆக்சிஜன் படுக்கைகளும் நிரம்பிவிட்டது. இதனால் பல்வேறு இடங்களிலிருந்து ஆம்புலன்சுகளில் கொண்டு வரப்படும் கொரோனா நோயாளிகள், சேலம் அரசு ஆஸ்பத்திரியில் படுக்கை வசதி கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர். 
குறிப்பாக ஆஸ்பத்திரி வளாகத்தில் ஆம்புலன்சுகளில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் இரும்பாலை வளாகத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கைகளுடன் சிறப்பு சிகிச்சை மையம் தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது. 
சிறப்பு சிகிச்சை மையம்
இதனால் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக வந்து படுக்கை வசதி இல்லாமல் காத்திருந்த சுமார் 30-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் ஆம்புலன்ஸ் மூலமாக இரும்பாலை வளாகத்தில் உள்ள சிறப்பு சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தனித்தனி படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனால் தற்போது சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தினமும் வரும் நோயாளிகள் யாரும் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்படவில்லை. ஆம்புலன்ஸ் வாகனங்களும் கொரோனா நோயாளிகளுடன் காத்திருக்க வேண்டியதில்லை. அதேநேரத்தில் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் யாரேனும் கொரோனா நோயாளிகள் வந்தால் அவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்க சிறப்பு மருத்துவர் குழு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தயாராக இருப்பார்கள்
இது குறித்து சேலம் அரசு ஆஸ்பத்திரி டீன் வள்ளி சத்தியமூர்த்தி கூறியதாவது:-
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் யாரும் இனிமேல் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் நோயாளிகள் இரும்பாலை சிறப்பு சிகிச்சை மையத்திற்கு உடனுக்குடன் அனுப்பி வைக்கப்படுகிறார்கள். இதற்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் ஒரு டாக்டர், ஒரு செவிலியர் மற்றும் மருத்துவ பணியாளர்கள் எந்த நேரமும் தயாராக இருப்பார்கள். 
ஆம்புலன்சில் நோயாளியை ஏற்றிக்கொண்டு யாரேனும் வந்தால் ஆம்புலன்சில் அவர்களுக்கு பாதிப்பு எப்படி இருக்கிறது? என்பதை கண்டறிந்து உடனடியாக இரும்பாலை சிறப்பு சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். இதனால் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் நிலைமை சீரடைந்து வருகிறது. அதேநேரத்தில் இரும்பாலை சிகிச்சை மையத்திற்கு நேரடியாக யாரும் செல்ல முடியாது. சேலம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து பரிந்துரை செய்தால் மட்டுமே அங்கு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
,,,,,,,,,,,,,,,

Next Story