பொள்ளாச்சியில் ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடின
பொள்ளாச்சியில் தளர்வுகள் இல்லாத ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
பொள்ளாச்சி,
பொள்ளாச்சியில் தளர்வுகள் இல்லாத ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. தேவையின்றி வெளியே சுற்றியவர்களின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
முழு ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை காரணமாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க தமிழக அரசு தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. மருந்து, பால் கடைகள் மட்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. வெளியிடங்களுக்கு செல்ல இ-பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும் நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை செய்யவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ஊரடங்கு காரணமாக பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை சுல்தான்பேட்டை, கோட்டூர் பகுதிகளில் மருந்து கடைகள், பால் கடைகள், ஒரு சில ஓட்டல்கள் தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தது.
சாலைகள் வெறிச்சோடின
பொள்ளாச்சி-கோவை சாலை, பாலக்காடு சாலை, பல்லடம் சாலை, உடுமலை சாலை ஆகியவை வாகனங்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. முழு ஊரடங்கையொட்டி பொள்ளாச்சி முக்கிய சாலைகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக சென்ற வாகனங்கள் இ-பதிவு செய்யப்பட்டுள்ளதா என்று சோதனை நடத்தினர். இதற்கிடையில் ஊரடங்கை மீறி தேவையின்றி வெளியே சுற்றித்திரிந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி, அபராதம் விதித்து வாகனங்களை பறிமுதல் செய்தனர். அத்தியாவசிய தேவைகளுக்காக வந்தவர்களை போலீசார் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.
அபராதம்
இதுதவிர பொள்ளாச்சியில் நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் அடங்கிய குழுவினர் ஆங்காங்கே கண்காணிப்பில் ஈடுபட்டு முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தனர்.
ஊரடங்கால் உணவின்றி தவித்தவர்கள், ஆதரவற்றோர்களுக்கு தன்னார்வலர்கள், போலீசார் உணவு, பிஸ்கெட் ஆகியவற்றை வழங்கினர். பொள்ளாச்சி பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்யப்படுகிறதா என போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story