பெங்களூருவில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்த 7 பேர் கைது


பெங்களூருவில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்த 7 பேர் கைது
x
தினத்தந்தி 31 May 2021 1:09 AM GMT (Updated: 31 May 2021 1:12 AM GMT)

பெங்களூருவில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக கர்நாடக மாநில மதுபாட்டில்களை கடத்திய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முழு ஊரடங்கையொட்டி மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பக்கத்து மாநிலமான கர்நாடகாவில் காலை 6 மணி முதல் 10 மணி வரை மதுக்கடைகளை திறக்க அந்த மாநில அரசு அனுமதிஅளித்துள்ளது.

இதை பயன்படுத்தி தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகாவிற்கு செல்லும் சிலர் சரக்கு வாகனங்கள், கார், இருசக்கர வாகனங்கள் மூலமாக மதுபாட்டில்களை கடத்தி வருகிறார்கள். அவர்களை கிருஷ்ணகிரி மாவட்ட மதுவிலக்கு போலீசார் பிடித்து வருகிறார்கள்.

2 பேர் கைது

அந்த வகையில் கிருஷ்ணகிரி மதுவிலக்கு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் நீலமேகம், தணிகாசலம், கண்ணன், வெங்கடேசன், வீராசாமி உள்ளிட்ட தனிப்படையினர் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது காவேரிப்பட்டணத்தில் இருந்து பெங்களூருவுக்கு நிப்பட் லோடு ஏற்றி சென்று திரும்பிய வேனை நிறுத்தி சோதனையிட்டபோது, 4 பெட்டிகளில் கர்நாடக மாநில மதுபாட்டில்கள் கடத்தியது தெரிந்தது. பெட்டி ஒன்றுக்கு 48 மதுபாட்டில்கள் என் மொத்தம் 192 மதுபாட்டில்களுடன் சரக்கு வேனை பறிமுதல் செய்த போலீசார் தர்மபுரி மாவட்டம் கும்பாரஅள்ளி பகுதியை சேர்ந்த டிரைவர் செந்தில் (30), பேகேரஅள்ளி, கோகிப்பட்டி பகுதியை சேர்ந்த கிளீனர் ராமன் (22) ஆகியோரை கைது செய்தனர். பிடிபட்ட மதுபாட்டில்களின் மதிப்பு 13 ஆயிரத்து 440 ரூபாய் ஆகும்.
கிருஷ்ணகிரியில் இருந்து திருவண்ணாமலை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஊத்தங்கரை அருகே உள்ள கண்ணன்டஅள்ளியில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் பத்மாவதி தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூருவில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் பின்பக்க சீட்டுக்கு அடியில் 250 கர்நாடக மாநில மதுபாட்டில்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. பின்னர் ஆட்டோ டிரைவரை பிடித்து விசாரித்ததில் அவர் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 29) என்பதும், இவர் பெங்களூருவில் இருந்து செங்கத்துக்கு மதுபாட்டில்கள் கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து ஆட்டோ டிரைவர் சதீசை போலீசார் கைது செய்தனர்.

ஊத்தங்கரை, ஓசூர்

பெங்களூருவில் இருந்து மீன் வளர்ப்புக்காக அழுகிய காய்கறிகளை வாங்கி வந்த சரக்கு வேனை சோதனை செய்தபோது அதில் 12 பெட்டிகளில் 576 கர்நாடக மாநில மதுபாட்டில்கள் இருந்தன. அதையும், சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்த போலீசார் இதுதொடர்பாக வண்டியை ஓட்டி வந்த கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டை பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் (27), கிளீனர் மணிகண்டன் (29) ஆகிய 2 பேரை கைது செய்தனர். பிடிபட்ட மதுவகைகளின் மொத்த மதிப்பு ரூ.47 ஆயிரத்து 340 ஆகும்.
ஓசூரில் ஜூஜூவாடி சோதனைச்சாவடியில் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூருவில் இருந்து ஓசூர் நோக்கி வந்த 2 மோட்டார்சைக்கிள்களை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் மோட்டார்சைக்கிள்களில் அட்டை பெட்டிகளில் கர்நாடக மாநில மதுபாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்த சந்துரு (வயது 24), பெங்களூருவை சேர்ந்த சல்மான் (30) என்று தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 288 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Next Story