மகளிர் சுயஉதவிக்குழு சார்பில் 10 வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை


மகளிர் சுயஉதவிக்குழு சார்பில் 10 வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை
x
தினத்தந்தி 31 May 2021 1:19 AM GMT (Updated: 31 May 2021 1:20 AM GMT)

சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் மகளிர் சுயஉதவிக்குழு சார்பில் 10 வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சுல்தான்பேட்டை,

சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் மகளிர் சுயஉதவிக்குழு சார்பில் 10 வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மகளிர் சுயஉதவிக்குழுவினர்

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை பரவலை கட்டுப்படுத்த தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஊரடங்கு காரணமாக மருந்து, பால் கடைகள் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு உள்ளது.

 இதனால் காய்கறிகளை அறுவடை செய்து விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகளும், காய்கறி கிடைக்காமல் பொதுமக்களும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழக ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்ட இயக்குனர் ரமேஷ்குமார் உத்தரவின்பேரில், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

காய்கறி விற்பனை

இதன்படி சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினர் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக காய்கறிகளை கொள்முதல் செய்து, தோட்டக்கலைத்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்று 10 வாகனங்கள் மூலம் காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றனர்.

இவர்கள் ஒன்றியத்தில் உள்ள 20 ஊராட்சி பகுதிகளில் பொதுமக்கள் இருப்பிடங்களுக்கே சென்று காய்கறிகளை விற்பனை செய்வார்கள்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

கண்காணிப்பு

சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் வியாபாரிகள் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுவினர் வாகனங்கள் மூலம் காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றனர். அவர்கள் உரிய விலைக்கு காய்கறிகளை விற்பனை செய்கிறார்களா என்பதை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன், மகளிர் திட்டம் உதவித்திட்ட அலுவலர் முத்து, வட்டார மேலாளர் வேல்முருகன், வட்டார ஒருங்கிணைப்பாளர் கோமதி மற்றும் அமிர்தவேணி குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.

ஒன்றியத்தில் விவசாய பொருட்களை விற்பனை செய்ய விரும்பும் விவசாயிகள் மற்றும் காய்கறி தேவைப்படுவோர் 86108 73753, 95786 52904, 99427 89912 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம். 
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story