8 ஆண்டுகளுக்கு பிறகு கராத்தே மாஸ்டர் மீது போலீசில் பாலியல் புகார் சென்னையில் தொடரும் 4-வது சம்பவம்


8 ஆண்டுகளுக்கு பிறகு கராத்தே மாஸ்டர் மீது போலீசில் பாலியல் புகார் சென்னையில் தொடரும் 4-வது சம்பவம்
x
தினத்தந்தி 31 May 2021 2:44 AM GMT (Updated: 31 May 2021 2:44 AM GMT)

சென்னையில் 8 ஆண்டுகளுக்கு பிறகு தனக்கு பாலியல் ெதால்லை கொடுத்ததாக கராத்தே மாஸ்டர் மீது பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்து உள்ளார்.

பூந்தமல்லி,

சென்னை கே.கே.நகர் பத்ம சேஷாத்திரி பள்ளியில் ஆன்லைன் வகுப்பில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் ராஜகோபாலன் போக்சோ சட்டத்தில் கைதானார். அதன்பிறகு இந்த சம்பவம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதையடுத்து சென்னை சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்தும் பாலியல் புகாரில் சிக்கினார். 3-வதாக சென்னை பிரைம் தடகள பயிற்சி மையத்தின் பயிற்சியாளர் நாகராஜன் என்பவரும் விளையாட்டு வீராங்கனைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது சென்னையில் 4-வதாக கராத்தே மாஸ்டர் ஒருவர் மீதும் பாலியல் குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

சென்னை போரூரை அடுத்த கெருகம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் பத்ம சேஷாத்திரி மில்லினியம் பள்ளியில் கராத்தே பயிற்சியாளராக பணியாற்றி வந்த கெபிராஜ் என்ற கராத்தே மாஸ்டர் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், விளையாட்டு போட்டிகளுக்கு அழைத்துச்செல்லும்போதும் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் சுமார் 8 ஆண்டுகளுக்கு பிறகு இளம்பெண் ஒருவர், அண்ணா நகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

விசாரணை

அதன்பேரில் போலீசார், கெபிராஜை போலீஸ் நிலையம் அழைத்து வந்து துணை கமிஷனர் ஜவகர் முன்னிலையில் விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர், 2014- ம் ஆண்டு வரை அந்த பள்ளியில் பணிபுரிந்ததாகவும், அதன் பிறகு பணியில் இருந்து நின்று விட்டதாகவும் கூறினார்.

இது தொடர்பாக போலீசாரிடம் கெபிராஜ் கூறியதாவது:-

அந்த பள்ளியில் இருந்து நின்ற பிறகு அண்ணா நகரில் கராத்தே மணி என்பவர் நடத்தி வந்த கராத்தே பள்ளியில் பயிற்சி கொடுத்து வந்தேன். தற்போது அந்த கராத்தே பள்ளியை நானே நடத்தி வருகிறேன். நான் இதுவரை போலீஸ், ராணுவ வீரர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களின் பிள்ளைகள் என 30 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளித்து உள்ளேன்.

என் மீது புகார் இருந்தால் தெரிவிக்கலாம் என என்னுடைய புகைப்படத்துடன் சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளனர். அதை வைத்து என் மீது புகார் அளிக்கப்பட்டு இருக்கலாம்.

இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

4 பிரிவுகளில் வழக்கு

இதையடுத்து அண்ணா நகர் அனைத்து மகளிர் போலீசார் கராத்தே மாஸ்டர் கெபிராஜ் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் 8 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ஏன் அந்த இளம்பெண் பாலியல் புகார் அளித்தார்? இதில் யாருடைய தூண்டுதலும் உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

போலீசாரின் முழு விசாரணைக்கு பிறகே அவர் மீது கைது நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட முழுமையான விவரங்கள் தெரியவரும்.

Next Story