சைதாப்பேட்டை ரேஷன் கடையில் கொரோனா நிவாரண நிதியை கொள்ளையடித்த மாற்றுத்திறனாளி வாலிபர் கைது


சைதாப்பேட்டை ரேஷன் கடையில் கொரோனா நிவாரண நிதியை கொள்ளையடித்த மாற்றுத்திறனாளி வாலிபர் கைது
x
தினத்தந்தி 31 May 2021 8:50 AM IST (Updated: 31 May 2021 8:50 AM IST)
t-max-icont-min-icon

சென்னை சைதாப்பேட்டை ரேஷன் கடையில் கொரோனா நிவாரண நிதி கொள்ளை போன வழக்கில் வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி வாலிபர் கைது செய்யப்பட்டார்.

சென்னை,

சென்னை சைதாப்பேட்டை பகுதியில் உள்ள ரேஷன் கடையில் கடந்த 16-ந்தேதி இரவு கொரோனா நிவாரண நிதி ரூ.7.36 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டது. கடை ஊழியர் குணசேகர், இதுகுறித்து சைதாப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார்.

சைதாப்பேட்டை உதவி கமிஷனர் அனந்தராமன் மேற்பார்வையில், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தெய்வநாயகி, சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் ஆகியோர் அடங்கிய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, அதில் கொள்ளையனின் உருவம் பதிவாகி இருந்தது. அதை வைத்து இந்த வழக்கில் துப்பு துலக்கப்பட்டது.

குற்றவாளி கைது

குற்றவாளி கைது செய்யப்பட்டார். அவருடைய பெயர் கோபி என்ற ஊமை கோபி (வயது 30). காஞ்சீபுரத்தைச் சேர்ந்த இவர், பழைய குற்றவாளி. இவர் மீது ஏராளமான திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரிடம் இருந்து ரூ.4.45 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

இவருக்கு காது கேட்காது. வாய்பேச முடியாது. அதனால் இவரை ஊமை கோபி என்றும் அழைப்பார்கள். வீடுகளில் பூட்டை உடைத்து திருடுவதில் கைதேர்ந்தவர். பழைய பேப்பர் பொறுக்குவது பகல் நேர தொழில். இரவு நேரத்தில் திருடுவார். பாரிமுனை பகுதியில் பிளாட்பாரத்தில் இரவு தூங்குவார்.

திருடியது எப்படி?

பெரிய அளவில் பணம் திருடியவுடன் காஞ்சீபுரம் போய் விடுவார். கோட்டை ரெயில் நிலையத்தில் ரெயிலில் ஏறி சைதாப்பேட்டை ரெயில் நிலையத்தில் இறங்கி, ரேஷன் கடை உள்ள பகுதிக்கு வந்து பிளாட்பாரத்தில் படுத்து தூங்குவது போல நடித்து நள்ளிரவில் கைவரிசை காட்டி உள்ளார். இந்த காட்சிகள் கேமராவில் பதிவாகி உள்ளது.

Next Story