வியாசர்பாடி போலீஸ் நிலையத்தில் இருந்து சப்-இன்ஸ்பெக்டரை தள்ளிவிட்டு விசாரணை கைதிகள் 3 பேர் தப்பி ஓட்டம்


வியாசர்பாடி போலீஸ் நிலையத்தில் இருந்து சப்-இன்ஸ்பெக்டரை தள்ளிவிட்டு விசாரணை கைதிகள் 3 பேர் தப்பி ஓட்டம்
x

வியாசர்பாடி போலீஸ் நிலையத்தில் இருந்து சப்-இன்ஸ்பெக்டரை கீழே தள்ளிவிட்டு விசாரணை கைதிகள் 3 பேர் தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பெரம்பூர்,

சென்னை வியாசர்பாடி போலீசார் நேற்று முன்தினம் இரவு வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் அசோக் பில்லர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த 3 பேரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

அதில் அவர்கள், அதே பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் என்ற இட்டா அஜித் (வயது 24), அஜய் புதா(26), ஜெகதீஸ்வரன்(21) என்பது தெரிந்தது. இவர்களில் அஜித்குமார் மீது கொலை, கொலை முயற்சி வழிப்பறி என 25 குற்ற வழக்குகள் உள்ளன. அஜய்புதா மீது கொலை முயற்சி உள்பட 24 குற்ற வழக்குகளும், ஜெகதீஸ்வரன் மீது 4 குற்ற வழக்குகளும் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து 3 பேரையும் விசாரணைக்காக நேற்றுமுன்தினம் இரவு முழுவதும் வியாசர்பாடி போலீஸ் நிலையத்தில் உள்ள ‘லாக்கப்’பில் அடைத்து வைத்தனர்.

தப்பி ஓட்டம்

இந்தநிலையில் நேற்று காலை 3 பேருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டதாக தெரிகிறது. இதனால் அப்போது பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் வினோத் ஜெயக்குமார், 3 பேரையும் கண்டித்தார். ஆனால் அதன்பிறகும் 3 பேரும் தாக்கிக்கொண்டனர்.

இதையடுத்து 3 பேரையும் ‘லாக்கப்’பில் இருந்து வெளியேற்றி, தனித்தனியாக அமர வைத்தார். அப்போது அஜித்குமார், போலீஸ் நிலையத்தில் இருந்த முகம் பார்க்கும் கண்ணாடியை உடைத்து தான் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டினார்.

அவரை சப்-இன்ஸ்பெக்டர் தடுக்க முயன்றார். அப்போது விசாரணை கைதிகள் 3 பேரும் திடீரென சப்-இன்ஸ்பெக்டர் வினோத் ஜெயக்குமாரை கீழே தள்ளிவிட்டு போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டனர். போலீசார் பிடிக்க முயன்றும் முடியவில்லை.

தனிப்படை அமைப்பு

இதில் சப்-இன்ஸ்பெக்டர் வினோத் ஜெயக்குமாருக்கு கையில் லேசான காயம் ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் புளியந்தோப்பு போலீஸ் துணை கமிஷனர் ராஜேஷ்கண்ணா சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்.

பின்னர் தப்பி ஓடிய 3 பேரையும் பிடிக்க வியாசர்பாடி இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் 3 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். போலீஸ் நிலையத்திேலயே சப்-இன்ஸ்பெக்டரை கீழே தள்ளிவிட்டு விசாரணை கைதிகள் 3 பேர் தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story