நடிகை கங்கனா ரணாவத்தின் பாதுகாவலர் கைது; மும்பை போலீசார் நடவடிக்கை


நடிகை கங்கனா ரணாவத்தின் பாதுகாவலர் கைது; மும்பை போலீசார் நடவடிக்கை
x
தினத்தந்தி 31 May 2021 9:37 AM GMT (Updated: 31 May 2021 9:37 AM GMT)

திருமணம் செய்வதாக கூறி பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்து ஏமாற்றிய நடிகை கங்கனா ரணாவத்தின் பாதுகாவலரை அவருடைய சொந்த ஊரான மண்டியாவில் வைத்து மும்பை போலீசார் கைது செய்தனர்.

நடிகை கங்கனா ரணாவத்
பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத். சர்ச்சைக்கு பெயா் போன இவர், அடிக்கடி ஏதாவது ஒரு கருத்தை தெரிவித்து சர்ச்சைக்குள்ளாகி வருகிறார். இந்தநிலையில், நடிகை கங்கனா ரணாவத்தின் பாதுகாவலர் ஒருவர், பெண்ணை திருமணம் செய்வதாக ஏமாற்றிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இதுபற்றிய விவரம் பின்வருமாறு:-

நடிகை கங்கனா ரணாவத்தின் பாதுகாவலராக இருப்பவர் குமார் ஹெக்டே. இவருடைய சொந்த ஊா் கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் ஹெக்கடஹள்ளி ஆகும்.

திருமணம் செய்வதாக கூறி...
இந்தநிலையில் குமார் ஹெக்டே, மும்பையில் கடந்த 8 ஆண்டுகளாக அழகு நிலையத்தில் வேலை பார்த்து வந்த 30 வயது பெண் ஒருவரை காதலித்து வந்தார்.மேலும் அவர், அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி அடிக்கடி உல்லாசம் அனுபவித்துள்ளதாக தெரிகிறது. இந்தநிலையில், அந்த பெண் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி குமார் ஹெக்டேவை வற்புறுத்தி உள்ளார். ஆனால் அவர் திருமணம் செய்வதாக கூறி தட்டிக்கழித்து வந்தார்.இந்தநிலையில் கடந்த மாதம் 27-ந்தேதி தனது தாயார் உடல்நலம் இன்றி கர்நாடகாவில் இறந்துவிட்டதாகவும் உடனடியாக ஊருக்கு செல்ல ரூ.50 ஆயிரம் தேவைப்படுவதாக கூறி உள்ளார். இதனை நம்பிய அப்பெண் பணத்தை கொடுத்து உள்ளார்.

போலீசில் புகார்
இந்தநிலையில் சில நாள் கழித்து அப்பெண் காதலன் குமார் ஹெக்டேவை தொடர்பு கொள்ள முயன்றார். இது முடியாமல் போனதால் அப்பெண் அவரை தேடி கர்நாடாகாவிற்கு சென்றார். அப்போது, குமார் ஹெக்டே வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முயன்றது தெரியவந்தது.இதனால் ஏமாற்றம் அடைந்த அப்பெண் மும்பை வந்து சம்பவம் குறித்து அந்தேரி டி.என். நகர் போலீசில், திருமணம் செய்வதாக தன்னை ஏமாற்றி குமார் ஹெக்டே கற்பழித்ததாக புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

சொந்த ஊரில் கைது
மேலும் மும்பை போலீசார் நேற்று முன்தினம் அவரது சொந்த ஊரான மண்டியா மாவட்டம் ஹெக்கடஹள்ளி கிராமத்துக்கு சென்று அங்கு பதுங்கி இருந்த குமார் ஹெக்டேவை கைது செய்தனர். பின்னர் அவரை போலீசார் மும்பைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story