வீட்டு தனிமையில் உள்ள தொற்றாளர்கள் 3 அடுக்கு முக கவசம் அணிய வேண்டும்; புதுச்சேரி சுகாதாரத்துறை செயலாளர் தகவல்


வீட்டு தனிமையில் உள்ள தொற்றாளர்கள் 3 அடுக்கு முக கவசம் அணிய வேண்டும்; புதுச்சேரி சுகாதாரத்துறை செயலாளர் தகவல்
x
தினத்தந்தி 31 May 2021 11:57 AM GMT (Updated: 31 May 2021 11:57 AM GMT)

வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ளும் தொற்றாளர்கள் 3அடுக்கு முககவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் கூறினார்.

இதுதொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் அருண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வீட்டு தனிமை
புதுச்சேரியில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மக்களுக்கு தேவையான ஆக்சிஜன் படுக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதித்தவர்கள் மருத்துவரின் அறிவுரைப்படி வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்தி கொள்ளலாம். லேசாக தொற்று பாதிப்பு இருந்தால் மட்டுமே வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ள அனுமதி அளிக்கப்படும்.அவ்வாறு அனுமதிக்கப்படும் கொரோனா நோயாளிகளுக்கு அரசின் வழிகாட்டுதல்கள் படி காற்றோட்டம் உள்ள தனி அறை இருக்க வேண்டும். 3 அடுக்கு முக கவசம் அணிய வேண்டும். 8 மணி 
நேரத்துக்கு ஒரு முறை முக கவசத்தை மாற்ற வேண்டும். பயன்படுத்திய முக கவசத்தை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த வேண்டும். தொற்று பாதித்தவரின் உதவிக்கு ஒருவராவது வீட்டில் கட்டாயம் இருக்க வேண்டும்.

தொடர் சங்கிலி
60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இணைநோய் உள்ளவர்கள் கட்டாயம் மருத்துவர்களின் ஆலோசனைக்கு பிறகே வீட்டில் தனிமைப் படுத்திக் கொள்ள வேண்டும். கொரோனா அறிகுறிக்கு ஏற்ப சிகிச்சை எடுத்துக்கொண்டாலே போதுமானது. சத்தான உணவுகள் மற்றும் கபசுர குடிநீர் அதிகமாக எடுத்துகொள்ள வேண்டும். ஆக்சிஜன் அளவு குறைந்தாலோ, மூச்சுத்திணறல், இருமல் இருந்தாலோ அவசர உதவி எண் 104-க்கு தொடர்பு கொண்டு மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். இதுபோன்ற வரைமுறைகளை பின்பற்றும்போது மருத்துவமனையில் சேர்க்காமலேயே அதிகம் பேர்
குணமடையலாம். வீட்டிலேயே தனிமைப்படுத்துவதன் மூலம் கொரோனா தொடர் சங்கிலியை உடைக்க முடியும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story