என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. அமைச்சர்கள் பதவி ஏற்பு எப்போது? ரங்கசாமியுடன் இன்று பேச்சுவார்த்தை; புதுச்சேரிக்கு மத்திய மந்திரி வருகை


என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. அமைச்சர்கள் பதவி ஏற்பு எப்போது? ரங்கசாமியுடன் இன்று பேச்சுவார்த்தை; புதுச்சேரிக்கு மத்திய மந்திரி வருகை
x
தினத்தந்தி 31 May 2021 6:00 PM IST (Updated: 31 May 2021 6:00 PM IST)
t-max-icont-min-icon

என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. அமைச்சர்கள் பதவி ஏற்பு எப்போது? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் ரங்கசாமியுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்த புதுச்சேரிக்கு மத்திய மந்திரி வருகிறார்.

புதுவை சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி 28 நாட்கள் ஆகிறது.

ரங்கசாமி அதிர்ச்சி
தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க, அ.தி.மு.க, பா.ம.க. ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. வாக்குகள் எண்ணப்பட்டதில் என்.ஆர்.காங்கிரஸ் (10), பா.ஜ.க. (6) கூட்டணி 16 இடங்களை வென்று ஆட்சியை பிடித்தது.இந்த வகையில் அமைச்சரவையில் அங்கம் வகிப்பது தொடர்பாக அப்போதே ரங்கசாமியை பா.ஜ.க. மேலிட தலைவர் நிர்மல்குமார் சுரானா வலியுறுத்தினார்.இதையடுத்து பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்துடன் ரங்கசாமி முதல்-அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார். இதற்கிடையே 3 பேரை எம்.எல்.ஏ.க்களாக மத்திய அரசு நியமித்தும், மேலும் 3 சுயேச்சை 
எம்.எல்.ஏ.க்களை வளைத்துப் போட்டு தனது பலத்தை பா.ஜ.க. 12 ஆக உயர்த்தியதும் ரங்கசாமியை அதிர்ச்சி அடைய வைத்தது.

என்.ஆர்.காங்.- பா.ஜ.க. உரசல்
இந்தநிலையில் புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். விரைவில் சட்டசபை கூட்டம் கூட்டப்பட்டு சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக அமைச்சர் பதவி இடங்களை பகிர்ந்து கொள்வதில் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. இடையே உரசல் இருந்து வருகிறது.அதாவது, முதல்-அமைச்சர் உள்பட 6 அமைச்சர் பதவி இடங்களை கொண்ட புதுச்சேரி அரசில் சரி சமமாக துணை முதல்-அமைச்சர் உள்பட 3 அமைச்சர் பதவிகளை கேட்டு பா.ஜ.க. நிர்ப்பந்தப்படுத்தியது தான் இதற்கு காரணம்.இதற்கு ரங்கசாமி சம்மதம் தெரிவிக்காததுடன் 
அமைச்சரவையில் மெஜாரிட்டி இடங்களை தன் பக்கம் வைத்து இருக்கவே விரும்புகிறார். இதனால் பா.ஜ.க.வின் நெருக்கடிக்கு இடம் கொடுக்காமல் தொடர்ந்து மவுனம் சாதித்து வருகிறார்.

ரங்கசாமியுடன் மோடி பேச்சு
இந்த சூழலில் ரங்கசாமியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது நலம் விசாரித்த பிரதமர் மோடி, முதல்- அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டதற்கு ரங்கசாமிக்கு வாழ்த்து தெரிவித்தார்.இதையடுத்து அமைச்சரவை பதவி இடங்கள் குறித்து மத்திய உள்துறை இணை மந்திரி கிஷண்ரெட்டி புதுவை வந்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தகவல்கள் வெளியாயின.இந்த பரபரப்பான சூழ்நிலையில் மேலிட அழைப்பின்பேரில் பா.ஜ.க. மூத்த தலைவர்களான நமச்சிவாயம், ஏம்பலம் செல்வம் ஆகியோர் டெல்லிக்கு திடீரென புறப்பட்டுச் சென்றனர்.அங்கு பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து பேசினார்கள். அப்போது, கூட்டணி அமைச்சரவையில் அங்கம் வகிப்பதில் என்.ஆர். காங்கிரஸ் பிடி கொடுக்காமல் இருந்து வருவது குறித்து அடுக்கடுக்கான புகார் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இன்று பேச்சுவார்த்தை
அமைச்சரவை விவகாரம் குறித்து பேசுவதற்காக மத்திய மந்திரி கிஷண்ரெட்டி இன்று (திங்கட்கிழமை) புதுச்சேரி வருகிறார். முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து அமைச்சரவை விரிவாக்கம், இலாகாக்கள் பிரிப்பது குறித்து அவர் ஆலோசிக்க உள்ளார்.அப்போது, பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரின் கருத்துகளை ரங்கசாமியிடம் கிஷண்ரெட்டி தெரிவிப்பார். இதன் முடிவில் அமைச்சரவை பதவிகளை பகிர்ந்து கொள்வது தொடர்பான பிரச்சினையில் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. இடையே சமரசம் ஏற்படும் என்று அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது,  3 அமைச்சர் பதவி இடங்கள் கிடைக்காதபட்சத்தில் துணை முதல்-அமைச்சர் உள்ளிட்ட 2 அமைச்சர் பதவிகள், துணை சபாநாயகர், டெல்லி சிறப்பு பிரதிநிதி போன்ற பதவிகளை பெற்றுக் கொண்டு சமரசமாக செல்வது என பா.ஜ.க. தரப்பில் முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது.

4-ந் தேதி அமைச்சரவை விரிவாக்கம்?
ரங்கசாமியுடன் மத்திய மந்திரி கிஷண் ரெட்டி நடத்தும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால் இலாகாக்கள் பிரிக்கப்பட்டு வருகிற 4-ந் தேதி அமைச்சர்கள் பதவி ஏற்கலாம் என தெரிகிறது. ஒரு வேளை இந்த விவகாரத்தில் சமரசம் ஆகவில்லை என்றால் சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்விலேயே என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க. இடையிலான கூட்டணி உறவு தொடருமா, இல்லையா? என்பது தெரிந்து விடும் என புதுவை அரசியலில் சூடு குறையாமல் இருந்து வருகிறது.

Next Story