கொரோனா வார்டில் பணியாற்றும் நர்சுகளுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை
தங்களது உயிரை பணயம் வைத்து கொரோனா வார்டில் பணியாற்றி வரும் நர்சுகளுக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை என்று முதல்-மந்திரி எடியூரப்பா உருக்கமாக கூறினார்.
பெங்களூரு:
தங்களது உயிரை பணயம் வைத்து கொரோனா வார்டில் பணியாற்றி வரும் நர்சுகளுக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை என்று முதல்-மந்திரி எடியூரப்பா உருக்கமாக கூறினார்.
ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை
கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலையின் பரவல் உச்சத்தை தொட்ட பிறகு தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. ஆயினும் மாநிலத்தில் தினசரி வைரஸ் தொற்று பரவல் 20 ஆயிரம் என்ற அளவில் உள்ளது. மருத்துவ சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 4 லட்சமாக உள்ளது.
இந்த எண்ணிக்கை அதிகம் தான் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த நிலையில் மாநிலம் முழுவதும் அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா வார்டுகளில் பணியாற்றி வரும் நர்சுகளுடன் முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று பெங்களூருவில் இருந்தபடி காணொலி மூலமாக உரையாடினார்.
இந்த உரையாடலின்போது, பீதரை சேர்ந்த ஆண் செவிலியர் சந்தோஷ், "சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் ஆஸ்பத்திரிகளில் பணியாற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு அரசு ஊக்கத்தொகை அறிவித்துள்ளது. அதேபோல் மருத்துவ கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்கும் ஊக்கத்தொகை அறிவிக்க வேண்டும்" என்றார். அதற்கு பதிலளித்த எடியூரப்பா, இது தொடர்பாக அரசு ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறினார்.
தடுப்பூசி போட நடவடிக்கை
அதைத்தொடர்ந்து மங்களூரு வென்லாக் ஆஸ்பத்திரி நர்சு வகிதா பேசுகையில், "கொரோனா முதல் அலையில் இணை நோய் இருந்த வயதானவர்கள் தான் அதிகளவில் இறந்தனர். ஆனால் 2-வது அலையில் இளம் வயதினர், நடுத்தர வயதினரும் கொரோனாவுக்கு பலியாகி வருகிறார்கள்.
எங்கள் குடும்பத்தினரும் கொரோனா பாதிப்புக்கு ஆளாக நேரிடும் ஆபத்து உள்ளது. அதனால் குடும்பத்தினருக்கும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
சாம்ராஜ்நகரை சேர்ந்த ஆண் செவிலியர் பிரதீப்குமார் பேசுகையில், "கொரோனா பாதிப்புக்கு ஆளாபவர்கள் உரிய நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு வருவது இல்லை.
நோய் முற்றிய நிலையில் ஆஸ்பத்திரிக்கு வருவதால், உயிரிழக்க நேரிடுகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார். இவ்வாறு பல்வேறு நர்சுகள் தங்களின் குறைகள், அனுபவங்களை முதல்-மந்திரியிடம் பகிர்ந்து கொண்டனர்.
ரூ.50 லட்சம் நிதி
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு எடியூரப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கொரோனா நெருக்கடியான நேரத்தில் தங்களின் உயிரை பணயம் வைத்து கொரோனா வார்டுகளில் நர்சுகள் பணியாற்றி வருகிறார்கள். அவர்களின் இந்த பணியை பாராட்டினேன். நர்சுகளுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை.
சொந்த பிரச்சினைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, குடும்பத்தினரிடம் இருந்து விலகி இருந்து நர்சுகள் பணியாற்றுகிறார்கள். அவர்களின் இந்த மிகுந்த பாராட்டுக்குரியது. அவர்களை வெகுவாக பாராட்டி ஊக்கப்படுத்தி உள்ளேன்.
கர்நாடகத்தில் தற்போது 21 ஆயிரத்து 574 நர்சுகள் அரசு ஆஸ்பத்திரிகளில் பணியாற்றி வருகிறார்கள். நர்சுகளின் பணியை ஊக்குவிக்கும் நோக்கத்தில் சம்பளத்துடன் ஊக்கத்தொகையாக மாதம் ரூ.8 ஆயிரம் வழங்கப்படுகிறது.
பணியின்போது இறந்த நர்சுகளுக்கு மத்திய அரசின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் வழங்கப்படுகிறது. கர்நாடகத்தில் 3 நர்சுகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சம் நிதி உதவி கிடைத்துள்ளது. இன்னும் 3 பேர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன. அவர்களுக்கும் விரைவில் இந்த காப்பீட்டுத்தொகை கிடைக்கும்.
கவச உடைகள்
நர்சுகளின் பாதுகாப்புக்காக பயிற்சி அளிக்கப்படுகிறது. அவர்களுக்கு உடல் கவச உடைகள், கையுறைகள், முகக்கவசங்கள், சானிடைசர் போன்றவற்றை அரசு வழங்கியுள்ளது.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
நர்சுகளுடன் எடியூரப்பா கலந்துரையாடிய போது, சுகாதாரத்துறை மந்திரி சுதாகர், அத்துறை கமிஷனர் திரிலோக் சந்திரா உள்பட உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story