கர்நாடகத்தில் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு?


கர்நாடகத்தில் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு?
x
தினத்தந்தி 31 May 2021 4:40 PM GMT (Updated: 31 May 2021 4:40 PM GMT)

மாநில அரசுக்கு நிபுணர் குழு வழங்கியுள்ள அறிக்கைப்படி கர்நாடகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெங்களூரு:

மாநில அரசுக்கு நிபுணர் குழு வழங்கியுள்ள அறிக்கைப்படி கர்நாடகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் சிக்பள்ளாப்பூரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

நிபுணர் குழு அறிக்கை

கர்நாடகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. மாநிலத்தில் தற்போது உள்ள ஊரடங்கை நீட்டிப்பது குறித்து அரசின் நிபுணர் குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அடுத்த ஒரு மாதத்திற்கு என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசனைகளை வழங்கியுள்ளது. 

இந்த ஆலோசனைகள் குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா, மூத்த மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுப்பார். நிபுணர்கள் கூறும் ஆலோசனைகளுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கிறது. ஊரடங்கை அமல்படுத்தியதால் வைரஸ் தொற்று பரவல் குறைந்துள்ளது. 

கொரோனா பரவல் விகிதம் 50 சதவீதமாக இருந்தது. ஊரடங்கை அமல்படுத்திய பிறகு அது தற்போது 15 சதவீதமாக குறைந்துள்ளது. மைசூரு உள்பட சில மாவட்டங்களில் மட்டும் பரவல் அதிகரித்து வருகிறது.
யாரும் கருதக்கூடாது

கொரோனா பரவல் குறைந்துள்ளதால், அதன் 2-வது அலை முடிந்துவிட்டது என்று யாரும் கருதக்கூடாது. ஊரடங்கு கட்டுப்பாடுகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். 

அரசின் கட்டுப்பாடுகளை மதிக்காமல் நடந்து கொண்டால், இந்த கொரோனா 2-வது தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. கர்நாடகத்தில் இதுவரை 1,250 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு உள்பட அனைத்து மாவட்ட ஆஸ்பத்திரிகளிலும் இந்த நோய்க்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நோய்க்கான மருந்து பற்றாக்குறை உள்ளது. 

தினமும் 10 ஆயிரம் ஆம்போடெரிசின் மருந்து குப்பிகள் தேவைப்படுகிறது. இதுகுறித்து மத்திய மந்திரி சதானந்தகவுடாவிடம் பேசியுள்ளோம். அவர் மருந்துகளை ஒதுக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.

சர்க்கரை நோய் பாதிப்பு

இந்த கருப்பு பூஞ்சை நோய் பாதிப்புக்கான காரணத்தை கண்டறிய ஒரு நிபுணர் குழுவை அமைத்துள்ளோம். அந்த குழு முதல்கட்ட அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. 

இன்னும் இறுதி அறிக்கையை அளிக்க வேண்டியுள்ளது. சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்கள் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி, அதிகளவில் ஆக்சிஜன், ஸ்டிராய்டு மருந்து  எடுத்துக் கொண்டவர்களுக்கு இந்த நோய் பாதிப்பு ஏற்படுவதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இவ்வாறு சுதாகர் கூறினார்.

முன்னதாக கிராமங்களில் கொரோனா பரவலை தடுக்க அமைக்கப்பட்டு உள்ள நடமாடும் மருத்துவ வாகன சேவையை சுதாகர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

7-ந் தேதிக்கு பிறகு...

அரசின் நிபுணர் குழு வழங்கியுள்ள அறிக்கையில், கர்நாடகத்தில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் வருகிற 7-ந் தேதிக்கு பிறகும் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று தெரிகிறது.

Next Story