தக்காளியில் நோய் தாக்குதல்


தக்காளியில் நோய் தாக்குதல்
x
தினத்தந்தி 31 May 2021 4:55 PM GMT (Updated: 31 May 2021 4:55 PM GMT)

உடுமலை பகுதியில் தக்காளியில் நோய் தாக்குதல் ஏற்பட்டு வீணாகி வருவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

போடிப்பட்டி
உடுமலை பகுதியில் தக்காளியில் நோய் தாக்குதல் ஏற்பட்டு வீணாகி வருவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
நோய் தாக்குதல்
உடுமலை பகுதியில் அதிக அளவில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு எல்லா பருவத்திலும் தக்காளி விளைச்சல் அதிக அளவில் இருப்பதால் இங்கிருந்து வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. ஆனாலும் வரத்து அதிகரிக்கும்போது விலை குறைவு தொடர்கதையாகவே உள்ளது.
அந்தவகையில் கடந்த சில மாதங்களாகவே தக்காளிக்கு போதிய விலை கிடைக்காத நிலையே நீடிக்கிறது. தற்போது கொரோனா ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் தக்காளி விற்பனை சீராக இருக்குமா?, போதிய விலை கிடைக்குமா? என்ற அச்சம் விவசாயிகளிடம் உள்ளது. இந்தநிலையில் தக்காளியில் காணப்படும் நோய் தாக்குதலால் பழங்கள் வீணாவது விவசாயிகளை வேதனையடையச் செய்துள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
போதிய விலை இல்லாததால் சமீப காலங்களாக தக்காளி சாகுபடியில் தொடர் நஷ்டத்தைச் சந்தித்து வருகிறோம். இந்தநிலையில் தக்காளியில் ஏற்பட்டுள்ள நோய் பாதிப்பு வேதனையளிக்கிறது.
கால்சியம் பற்றாக்குறை
தக்காளி செடிகளில் உள்ள காய்கள் நன்கு முற்றி பழுக்கத் தொடங்கும் சமயத்தில் அதன்மேல் லேசான கரும்புள்ளிகள் தோன்றுகிறது. அதனைத் தொடர்ந்து கரும்புள்ளிகளைச் சுற்றி அழுகத் தொடங்குகிறது. இதனால் பெருமளவு பழங்கள் வீணாகிறது. மேலும் இந்த அழுகல் தோன்றிய பழங்களை தனியாகப் பிரிப்பதற்கு கூடுதலாக செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. அப்படி பிரிக்காவிட்டால் ஒட்டுமொத்த பழங்களும் சந்தையில் விலை போகாத நிலை ஏற்படும். புள்ளி அழுகல் நோய், ஊசிப்புள்ளி நோய் என்று இதற்கு ஏதேதோ பெயர் சொல்கிறார்கள். எனவே இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் கூறினர்.
இதுகுறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், பழங்களில் இதுபோன்ற கரும்புள்ளி தோன்றி அழுகல் ஏற்படுவதற்கு கால்சியம் பற்றாக்குறையே காரணமாகும்.
எனவே தக்காளியில் இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால் கால்சியம் நைட்ரேட் பவுடரை 10 லிட்டர் தண்ணீருக்கு 15 கிராம் என்ற அளவில் கலந்து செடிகளின் மீது நன்கு படும்படி தெளிக்க வேண்டும்.
ஒருவார இடைவெளியில் மீண்டும் இதுபோல மருந்துக் கரைசலை தெளித்தால் தக்காளிப் பழங்கள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கலாம்'என்றனர்.

Next Story