ஆம்பூர் அருகே சரக்கு ரெயில் மோதி 2 ஊழியர்கள் பலி


ஆம்பூர் அருகே சரக்கு ரெயில் மோதி  2 ஊழியர்கள் பலி
x
தினத்தந்தி 31 May 2021 10:44 PM IST (Updated: 31 May 2021 10:44 PM IST)
t-max-icont-min-icon

ஆம்பூர் அருகே சிக்னல் கோளாறை சரிசெய்து விட்டு திரும்பிய 2 ஊழியர்கள் சரக்கு ரெயில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

ஜோலார்பேட்டை

சிக்னலை சரிசெய்தனர்

திருப்பத்தூரை அடுத்த புதூர்நாடு மொழலை கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 43). இவர் ஆம்பூர் ெரயில் நிலையத்தில் சிக்னல் பிரிவில் டெக்னீஷியனாக பணிபுரிந்து வந்தார். இவருடன் பீகார் மாநிலம் கையாகுருவா மாவட்டம், நரியாகி கிராமத்தை சேர்ந்த தத்தியோ யாதவ் என்பவருடைய மகன் பர்வேஷ்குமார் (27) என்பவர் டெக்னீஷியனாக வேலைபார்த்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 1 மணி அளவில் கொட்டும் மழையில் ஆம்பூர் -பச்சகுப்பம் ரெயில் நிலையங்களுக்கு இடையே கோவிந்தாபுரம் என்ற இடத்தில் பழுதடைந்திருந்த சிக்னல் கோளாறை சரி செய்துவிட்டு, மழை பெய்துகொண்டிருந்ததால் இருவரும் ரெயின்கோட் அணிந்து கொண்டு, குடை பிடித்தபடி தண்டவாளத்தில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

ரெயில் மோதி 2 பேர் பலி

அப்போது ஜோலார்பேட்டையில் இருந்து ரேணிகுண்டா நோக்கி சரக்கு ரெயில் வந்துள்ளது. இவர்கள் நடந்து சென்ற தண்டவாளம் வளைவாக இருந்ததால், பின்னால் ரெயில் வருவதை இவர்கள் கவனிக்கவில்லை. இதனால் கண் இமைக்கும் நேரத்தில் தண்டவாளத்தில் நடந்து சென்று கொண்டிருந்த 2 பேர் மீதும் சரக்கு ரெயில் மோதியது. இதில் அவர்கள் இருவரும் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதை பார்த்ததும் சரக்கு ரெயிலை ஓட்டிவந்த டிரைவர்  பாதுர்ஷா என்பவர் 300 மீட்டர் தூரம் சென்ற ரெயிலை நிறுத்தி பார்த்தபோது 2 பேரின் உடல்களும் சக்கரத்தில் சிக்கியிருந்தது தெரியவந்தது. 

உடல்களை மீட்ட டிரைவர்

உடனே அவர் ரெயிலை பின்னோக்கி நகர்த்திவிட்டு, அவருடன் இருந்த மற்றொரு டிரைவருடன் சேர்ந்து 2 பேரின் உடல்களையும் மீட்டு தண்டவாளம் அருகில் வைத்துவிட்டு, பச்சகுப்பம் ரெயில் நிலையத்துக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்து விட்டு புறப்பட்டு சென்றார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story