‘வாட்ஸ்-அப்’ குழு மூலம் மதுபாட்டில்கள் விற்பனை


‘வாட்ஸ்-அப்’ குழு மூலம் மதுபாட்டில்கள் விற்பனை
x
தினத்தந்தி 31 May 2021 5:22 PM GMT (Updated: 31 May 2021 5:22 PM GMT)

வாணியம்பாடியில் ‘சரக்கு குழு’ என ‘வாட்ஸ்-அப்’ குழு அமைத்து மதுபாட்டில்கள் விற்பனை ஜரூராக நடந்து வருகிறது. சம்பந்தப்பட்டவர்களை கைது செய்வது எப்படி? என போலீசார் திணறி வருகிறார்கள்.

வாணியம்பாடி

ஊரடங்கு உத்தரவு

தமிழக அரசு கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது. இதனால் சாராயம், கள்ளத்தனமாக மதுபான பாட்டில்கள் என பல்வேறு இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது. 
காவல்துறையினர் சாராயம் விற்பவர்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வந்து மதுபானம் விற்பனை செய்யும் கும்பலை கைது செய்து வருகின்றனர். 

‘வாட்ஸ்-அப்’ குழு

இந்த நிலையில் வாணியம்பாடியில் 'சரக்கு குழு' என வாட்ஸ்-அப் குழு தொடங்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் 150-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இந்த குழுவில் தொடர்புள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு இந்த குழு மூலம் மதுபாட்டில்கள் விற்பனை நடந்து வருகிறது. வெளிமாநில மதுபாட்டில்கள் மற்றும் சாராயம் உட்பட அனைத்துமே சலுகை விலையில் தருகின்றனர்.
 
மதுபானம் வாங்க விரும்புவோர் அவருடைய வாய்ஸ் மூலம் அந்த குழுவில் பதிவு செய்வார்கள். உடனடியாக குரூப் அட்மின் மற்றும் அதில் இருப்பவர்கள் அவர்களிடம் உள்ள மதுபான பாட்டில்கள் விவரம் மற்றும் விலையை உடனடியாக வாய்ஸ் மூலம் பதிவு செய்வார். 

போலீசார் திணறல்

ஊரடங்கு காலம் என்பதால் குறிப்பிட்ட இடத்தை தேர்வு செய்து அந்த இடத்துக்கு சென்று அங்கு தயாராக நிற்பவரிடம் சரக்கை பெற்றுக் கொள்ளலாம் என குரூப் அட்மின் உத்தரவு பிறப்பிக்கிறார். இதை குழுவில் உள்ள அனைவரும் பின்பற்றி வருகின்றனர். 
இந்தக் குழுவினர் பேசும் ஆடியோக்கள் பிற குழுக்களிலும் பகிர்வு செய்யப்பட்டு வேகமாக பரவி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

இதனால் காவல்துறையினர் இவர்களை எப்படி கைது செய்வது? என்று புரியாமல் திணறி வருகின்றனர்.

Next Story