பெங்களூருவில் இருந்து லாரியில் முட்டைகோஸ் மூட்டைகளுக்கு இடையே கடத்திவரப்பட்ட 3900 மதுபாட்டில்கள் பறிமுதல்
திருக்கோவிலூர் அருகே பெங்களூருவில் இருந்து லாரியில் முட்டைகோஸ் மூட்டைகளுக்கு இடையே மறைத்து வைத்து கடத்திவரப்பட்ட 3,900 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் டிரைவர் உள்பட 2 பேரை கைது செய்தனர்.
திருக்கோவிலூர்
ரகசிய தகவல்
பெங்களூருவிலிருந்து திருக்கோவிலூர் பகுதிக்கு முட்டைகோஸ் மற்றும் காய்கறிகள் ஏற்றி வரும் லாரியில் மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுவதாக அரகண்டநல்லூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் தங்கவேல் தலைமையிலான போலீசார் திருக்கோவிலூர் அருகே உள்ள தபோவனம் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருவண்ணாமலை மார்க்கத்திலிருந்து வேகமாக வந்த லாரியை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
கர்நாடக மதுபாட்டில்கள்
இதில் லாரியில் இருந்த முட்டைகோஸ் மூட்டைகளை அகற்றி பார்த்தபோது அடியில் ஏராளமான அட்டைப்பெட்டிகள் இருந்தன. சந்தேகத்தின் பேரில் ஒரு பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் கர்நாடக மாநில மதுபாட்டில்கள் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். மொத்தம் 3 ஆயிரத்து 900 மதுபாட்டில்கள் இருந்தன.
இதையடுத்து லாரியில் வந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தியபோது லாரி டிரைவர் திருக்கோவிலூர் அருகே உள்ள தணிக்கலாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஏகாம்பரம் மகன் ரவி(வயது 25), உளுந்தூர்பேட்டை தாலுகா கிளியூர் கிராமத்தைச் சேர்ந்த முருகன் மகன் அய்யனார்(30) என்பதும் தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருப்பதால் பெங்களூருவில் இருந்து காய்கறிகளுக்கு இடையே மறைத்து வைத்து மதுபாட்டில்களை விற்பனைக்காக கடத்தி வந்ததும் தெரியவந்தது.
2 பேர் கைது
இதையடுத்து ரவி, அய்யனார் ஆகியோரை கைது செய்த போலீசார் காய்கறி மற்றும் 3,900 மதுபாட்டில்களுடன் லாரியையும் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய திருக்கோவிலூர் அருகே உள்ள அரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கேசவன் மகன் வசீகரன்(35) தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கண்டாச்சிபுரம்
அதேபோல் கண்டாச்சிபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான போலீசார் திருக்கோவிலூர் அருகே உள்ள கண்டாச்சிபுரம் மழவந்தாங்கல் கிராமத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக கூலி தொழிலாளிகளை ஏற்றி வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது உள்ளே இருந்த அட்டைப்பெட்டிகளை சந்தேகத்தின் பேரில் திறந்து பார்த்தபோது அதில் கர்நாடக மாநில மதுபாட்டில்கள் இருந்தை போலீசார் கண்டுபிடித்தனர். மொத்தம் 600 மதுபாட்டில்கள் இருந்தன.
இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் மினி லாரி டிரைவர் காரணைபெரிச்சானூர் கிராமத்தைச் சேர்ந்த தவிடு கிருஷ்ணன் மகன் முனியன்(வயது 42) என்பதும், பெங்களூருவில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்ததும், சந்தேகம் வராமல் இருப்பதற்காக கூலி ஆட்களை ஏற்றி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து முனியனை கைது செய்தபோலீசார் மது பாட்டில்களுடன் மினி லாரியையும் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும்.
Related Tags :
Next Story