அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை நவீனபடுத்த நடவடிக்கை


அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை நவீனபடுத்த நடவடிக்கை
x
தினத்தந்தி 31 May 2021 5:29 PM GMT (Updated: 31 May 2021 5:29 PM GMT)

உடுமலையை அடுத்துள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை நவீனபடுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறினார்.

உடுமலை
உடுமலையை அடுத்துள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை நவீனபடுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறினார்.
சர்க்கரை ஆலை
உடுமலையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரத்தில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலையில் 2020-2021-ம் ஆண்டு கரும்பு அரவைப்பருவத்திற்கான கரும்பு அரவை கடந்த ஏப்ரல் மாதம் 16-ம்தேதி தொடங்கியது. இந்த ஆண்டு அரவைப்பருவத்தில் நேற்று காலை 6 மணிவரை 28 ஆயிரத்து 579 டன் கரும்பு அரவை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் நேற்று ஆலைக்கு வந்திருந்தனர். அவர்கள் ஆலையில் கரும்பு அரவைப்பகுதி முதல் சர்க்கரை உற்பத்திபகுதி வரை ஒவ்வொரு பகுதியாக சென்று ஆய்வு செய்தனர். அப்போது ஆலையில் கரும்பு அரவை மற்றும் செயல்பாடுகள் குறித்து அமைச்சர்களுக்கு, ஆலையின் மேலாண்மை இயக்குனர் பால்பிரின்ஸ்லி ராஜ்குமார் எடுத்துரைத்தார்.
நவீன படுத்த நடவடிக்கை
இதைத்தொடர்ந்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை நவீனபடுத்தவேண்டும் என்பது கரும்பு விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.  அதன்படி இந்த ஆலையை நவீனபடுத்துவதற்கு முதல்-அமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கடந்த சில மாதங்களாக ஆலையில் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சர்க்கரை இருப்பு உள்ளது. அதை வினியோகிக்கவும், கரும்பு விவசாயிகளுக்கு கரும்புக்கான தொகை உடனுக்குடன் கிடைக்கவும், ஆலைத்தொழிலாளர்களுக்கு சம்பளம் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாட்டில் அனைத்து பகுதிகளிலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகிறவர்களை அழைத்து செல்வதற்காக ஆம்புலன்ஸ் வசதிகளை அரசு செய்துள்ளது.கொரோனாவை முற்றிலும் ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கு அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும். பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் கொரோனாவை விரைவில் ஒழித்து விடலாம். 
இவ்வாறு அவர் கூறினார். 
கலந்து கொண்டவர்கள்
இந்த ஆய்வின்போது கலெக்டர் விஜயகார்த்திகேயன், தி.மு.க.திருப்பூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஆர்.ஜெயராமகிருஷ்ணன், பொருளாளர் முபாரக் அலி, தி.மு.க.திருப்பூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் இல.பத்மநாபன், உடுமலை நகர செயலாளர் எம்.மத்தீன், முன்னாள் நகரமன்ற உறுப்பினர் அரசகாளை,சர்க்கரை  ஆலை கரும்பு பெருக்கு அலுவலர் சுப்புராஜ், அலுவலக மேலாளர் (பொறுப்பு) கண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மடத்துக்குளம்
அமராவதி சர்க்கரை ஆலையில் ஆய்வை முடித்த பின்னர் அமைச்சர்கள்  மடத்துக்குளம் அருகே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்தனர். அங்கு கொரோனா நோய் சிகிச்சை குறித்து வட்டார மருத்துவ அலுவலர் விஜயலட்சுமியிடம் கேட்டறிந்தனர்.  
இதில் தாசில்தார் கனிமொழி,  வட்டார வளர்ச்சி அலுவலர் சாதிக் பாட்சா, கணியூர் பேரூராட்சி செயல் அலுவலர் தாஜ் நிஷா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தாமரைக்கண்ணன், சுகாதார ஆய்வாளர் பொன் ஆண்டவர், மற்றும் அரசு அதிகாரிகள், முன்னாள் மடத்துக்குளம் எம்.எல்.ஏ., ஜெயராம கிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story