குமரியில் மழையால் சேதமடைந்த பயிர்களை கணக்கெடுக்கும் பணி தீவிரம்
குமரி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களை கணக்கெடுக்கும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களை கணக்கெடுக்கும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். முதல் கட்டமாக 131 எக்டேரில் பயிரிடப்பட்டு இருந்த நெல், வாழை சேதமடைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் வருகை
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புயல், மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்தது. ஏராளமான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல், வாழை போன்ற பயிர்கள் மழைநீரில் மூழ்கின.
இது குறித்து ஆய்வு செய்வதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் குமரி மாவட்டத்திற்கு வந்தார். அவர் மழை வெள்ளத்தால் சேதம் அடைந்த குடியிருப்பு பகுதிகள், பயிர்கள், பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு மையங்கள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் சேதமடைந்த வீடுகள், பயிர்கள் ஆகியவற்றை துல்லியமாக, விரைவாக கணக்கிட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதிகாரிகள் தீவிரம்
இந்த நிலையில் மழை வெள்ளம் வடிய தொடங்கியதை தொடர்ந்து நேற்று முதல் வேளாண்மை துறை அதிகாரிகளும், கிராம நிர்வாக அதிகாரிகளும் இணைந்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கிடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
நெற்பயிரை பொறுத்த வரையில் முதல் கட்டமாக குமரி மாவட்டத்தில் 112 எக்டேரில் பயிரிடப்பட்டு இருந்த பயிர்கள் சேதம் அடைந்திருப்பதாக வேளாண்மை துறை அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணி இன்று (செவ்வாய்க்கிழமை) நிறைவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். குருந்தன்கோடு, அகஸ்தீஸ்வரம் ஆகிய வட்டார பகுதிகளில் சுமார் 110 எக்டேர் நிலப்பரப்பிலான நெற்பயிர்களும், ராஜாக்கமங்கலம் வட்டார பகுதியில் 3 எக்டேர் பரப்பிலான நெற்பயிர்களும் சேதம் அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது. இதன் முழு விவரம் இன்று தெரியும் என்று அதிகாரிகள் கூறினர்.
வாழைகள் , காய்கறிகள்
இதேபோல் தோட்டக்கலைத்துறையை பொறுத்தவரையில் 18.88 எக்டேர் நில பரப்பில் பயிரிடப்பட்டு இருந்த வாழைகளும், காய்கறி பயிர்களும் சேதம் அடைந்திருப்பதாக அதிகாரிகள் கூறினர். இதில் காய்கறி பயிர்கள் மட்டும் 2.6 எக்டேர் நிலப்பரப்பில் சேதம் அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது. வாழையை பொறுத்த வரையில் குருந்தன்கோடு வட்டார பகுதியில் அதிகபட்சமாக 11 எக்டேர் பரப்பில் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகளால் கணக்கிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 56 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கெடுப்பு மூலம் தெரியவந்துள்ளது. இந்த கணக்கெடுப்பு பணி முழுமையாக நிறைவடையும் போது தற்போது உள்ள சேத மதிப்பு சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
451 வீடுகள்
கொல்லங்கோடு அருகே அடைக்காகுழி பஞ்சாயத்து உட்பட்ட ஆக்கவிளை பகுதியில் உள்ள சுமார் 100 ஏக்கர் விவசாய நிலம் நீரில் மூழ்கியது. அதில் விளைவிக்கபட்டிருந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் அழுகி சேதமடைந்தன. அவற்றை தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது, விவசாயிகள் தற்போது அரசு அறிவித்திருக்கும் இழப்பீடு தொகை போதுமானதாக இல்லை என்றும் அதனை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
இதுபோல் மழை வெள்ளத்தால் முழுமையாகவும், பகுதி அளவாகவும் 451 வீடுகள் சேதம் அடைந்து இருப்பதாக வருவாய்த்துறை அதிகாரிகளால் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பு பணியும் தொடர்ந்து நடந்து வருகிறது. கணக்கெடுப்பு பணி முடிந்ததும் சேத விவரம் குறித்த அறிக்கை தமிழக அரசுக்கு மாவட்ட கலெக்டர் மூலம் அனுப்பி வைக்கப்படும். அதன் பிறகு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைப்பதற்கான நடவடிக்கைகள் தொடரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story