பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் வாகனங்கள் மூலம் மளிகை பொருட்கள் விற்பனை


பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் வாகனங்கள் மூலம் மளிகை பொருட்கள் விற்பனை
x
தினத்தந்தி 31 May 2021 11:36 PM IST (Updated: 31 May 2021 11:36 PM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் வாகனங்கள் மூலம் மளிகை பொருட்கள் விற்பனை செய்வது குறித்து அதிகாரிகள், வியாபாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.

பொள்ளாச்சி

பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் வாகனங்கள் மூலம் மளிகை பொருட்கள் விற்பனை செய்வது குறித்து அதிகாரிகள், வியாபாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.

ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த தளர்வுகள் இல்லாத ஊரடங்கு வருகிற 7-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக காய்கறிகள், பழங்கள் வாகனங்கள் மூலம் நகர்புறங்கள் மற்றும் கிராமங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

இதேபோன்று மளிகை பொருட்களையும் விற்பனை செய்வதற்கு அரசு உத்தரவிட்டு உள்ளது. இதுதொடர்பாக பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் தணிகவேல் தலைமை தாங்கினார். இதில் போலீஸ் துணை சூப்பிரண்டு சிவக்குமார், நகராட்சி கமிஷனர் காந்திராஜ் மற்றும் வியாபாரிகள் சங்கத்தினர், தொழில் வர்த்தக சபையினர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து வருவாய் துறை அதிகாரிகள் கூறியதாவது:-

அனுமதி சீட்டு

காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்வது போன்று, மளிகை பொருட்களை நடமாடும் வாகனங்கள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் 2 நகராட்சிகள், 9 பேரூராட்சிகள், 112 ஊராட்சிகள் உள்ளன. தொலைபேசி அல்லது ஆன்லைன் மூலம் ஆர்டர் பெற்று மளிகை பொருட்களை நேரடியாக வீட்டிற்கு சென்று விற்பனை செய்யலாம்.

பொள்ளாச்சி நகரில் 36 வார்டு பகுதிகளில் மளிகை பொருட்கள் விற்பனை செய்வதற்கு 6 வார்டுக்கு தலா ஒரு வாகனம் மூலம் 6 வாகனங்களில் செய்யப்படும். இதற்கான அனுமதி சீட்டு நகராட்சி மூலம் வழங்கப்படும். சாதாரண ஏழை, எளிய மக்கள் வாங்கி பயன்பெறும் வகையில் 50 கிராம், 100 கிராம், ஒரு கிலோ என அளவு பொருட்களை பேக்கிங் செய்து விற்பனை செய்ய வேண்டும்.

மொத்த வியாபாரிகள்

டிபார்மெண்ட் ஸ்டோர்கள் மூலம் பொருட்களை வீட்டிற்கு சென்று விற்பனை செய்வதற்கு 19 வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை பொருட்களை விற்பனை செய்யலாம். இதேபோன்று ஊராட்சிகள், பேரூராட்சிகளில் வாகனங்கள் மூலம் விற்பனை செய்வதற்கு அனுமதி அளிக்கப்படும்.

மொத்த வியாபாரிகள் பொருட்களை வாகனங்களில் அந்தந்த கிராமங்களுக்கு சென்று சில்லறை வியாபாரிகளிடம் கொடுத்து விற்பனை செய்வார்கள். இதற்கு மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டு உள்ளது.

பாதுகாப்பு வழிமுறைகள்

கிராமங்களில் இருந்து வியாபாரிகள் யாரும் பொள்ளாச்சிக்கு பொருட்கள் வாங்குவதற்கு வர வேண்டிய தேவையில்லை. மொத்த வியாபாரிகள் மூலம் கிராமங்களுக்கு பொருட்கள் கொண்டு வரப்படும். இதற்காக 25 வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளது. 

அனுமதி சீட்டு உள்ள வாகனங்கள் மட்டும் மளிகை பொருட்கள் விற்பனை செய்வதற்கு அனுமதி அளிக்கப்படும். கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடித்து பொருட்களை விற்பனை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story