மாடுகளை தாக்கும் கோமாரி நோயை மூலிகை மருத்துவத்தால் கட்டுப்படுத்தலாம்
மாடுகளை இந்த கால கட்டத்தில் கோமாரி எனும் காணை நோய் தாக்குகிறது. இதனை குணமாக்க கால்நடை வளர்ப்போர் மூலிகை மருந்துகளை கையாளலாம்.
மதுரை,ஜூன்
மாடுகளை இந்த கால கட்டத்தில் கோமாரி எனும் காணை நோய் தாக்குகிறது. இதனை குணமாக்க கால்நடை வளர்ப்போர் மூலிகை மருந்துகளை கையாளலாம்.
இது குறித்து கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குநர் டாக்டர் சரவணன் கூறியதாவது:-
அறிகுறிகள்
கோமாரி நோய் கலப்பின மாடுகளைத் தான் அதிக அளவில் பாதிக்கிறது. மாடுகளுக்கு இந்த நோயானது தீவனம், தண்ணீர், வைக்கோல், இதர உபகரணங்கள் மற்றும் மனிதர்கள் மூலமும் பரவும். பாதிக்கப்பட்ட மாடுகளின் சிறுநீர், பால், உமிழ் நீர் மற்றும் சாணம் ஆகியவற்றால் அதிகமான கால்நடைகளுக்கு இந்ேநாய் பரவுகிறது.
இந்த நோயின் அறிகுறிகளாக பாதித்த மாடுகளில் அதிக காய்ச்சல், வாயில் இருந்து நுரை கலந்த உமிழ்நீர் ஒழுகும். வாயின் உட்பகுதி நாக்கு, கால் குளம்புகளின் நடுப்பகுதி, மடி ஆகிய இடங்களில் கொப்புளங்கள் தோன்றி உடைந்து புண்ணாக மாறும். அசை போடும் போது மாடு சப்பு கொட்டுவது போல் சப்தம் கேட்கும். பாதிக்கப்பட்ட பசுக்களின் பாலை குடித்தால் கன்றுகள் உடனடியாக இறக்க நேரிடும்.
சிகிச்சை
வாயில் புண்கள் ஏற்படும் என்பதால் தீவனம் சரியாக உட்கொள்ள முடியாது. நோயுற்ற மாடுகளுக்கு பசுந்தீவனம் மற்றும் காய்ச்சிய கஞ்சி அளிக்கலாம். பொட்டாசியம் பெர்மாங்கனேட் 4 கிராமை 100 மில்லி தண்ணீரில் கலந்து புண்களை கழுவ வேண்டும். போரிக் ஆசிட் மற்றும் கிளிசரின் சம அளவில் கலந்து புண்களில் தடவலாம். வெப்பெண்ணெய் கொண்டு கால் புண்களுக்கு சிகிச்சை அளிக்கலாம்.
இந்த நோயை கட்டுப்படுத்த நோய் பாதித்த கால்நடைகளை தனியே வேறு இடத்தில் வைத்து பராமரிக்க வேண்டும். கால்நடை கொட்டகையை 4 சதவிகித சோடியம் கார்பனேட் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். சுண்ணாம்பு தூளை மாட்டு கொட்டகையை சுற்றி தூவ வேண்டும். நோய் பாதித்த மாடுகளின் பாலை கன்றுகளுக்கு வழங்கக்கூடாது.
மூலிகை சிகிச்சை
சீரகம் 10 கிராம், வெந்தயம் 10 கிராம், மிளகு 10 கிராம், மஞ்சள் பொடி 10 கிராம், பூண்டு 2 பல், கருப்பட்டி 100 கிராம் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் சீரகம், வெந்தயம், மிளகு ஆகியவற்றை நீரில் அரைமணி நேரம் ஊற வைத்து அரைத்து அத்துடன் மஞ்சள், பூண்டு, கருப்பட்டி சேர்ந்து அரைத்து பின்னர் ஒரு தேங்காய் துருவலுடன் கலந்து நோய் கண்ட மாட்டுக்கு காலை, மாலை தொடர்ந்து 5 நாட்கள் வாய்வழியாக கொடுக்கலாம்.
கால் புண் மருந்து
பூண்டு 5 பல், மஞ்சள் 50 கிராம், குப்பை மேனி, துளசி, வேப்பிலை மற்றும் மருதாணி இலை அனைத்தும் ஒரு கைப்பிடி மற்றும் நல்லெண்ணெய் 1 லிட்டர் எடுத்து கொண்டு மேற்கண்ட பொருட்களை அரைத்து எண்ணெயுடன் கலந்து காய்ச்சி மருந்து தயாரிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாட்டின் கால் புண்ணை சிறிது உப்பு கலந்து கொதிக்க வைத்த தண்ணீரை கொண்டு கழுவி, புண் உலர்ந்தவுடன் மேற்கண்ட மருந்தை காலை மாலை தொடர்ந்து பூசி வர குணமாகும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story