விருதுநகரில் உணவகங்களுக்கு ‘சீல்’
விருதுநகரில் அரசு ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக உணவகங்களுக்கு நகராட்சி நிர்வாகத்தினர் ‘சீல்’ வைத்தனர்.
விருதுநகர்,
விருதுநகரில் அரசு ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக உணவகங்களுக்கு நகராட்சி நிர்வாகத்தினர் ‘சீல்’ வைத்தனர்.
விதிமீறல்
தமிழக அரசு தளர்வற்ற முழுஊரடங்கு அறிவித்துள்ள நிலையில் உணவகங்களில் குறிப்பிட்ட நேரங்களில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி வழங்கியுள்ளது. ஆனாலும் விருதுநகரில் பல பகுதிகளில் உணவகங்கள் அரசு அறிவித்துள்ள நேர கட்டுப்பாட்டை மீறி முழுநேரமும் செயல்படுவதாக புகார் கூறப்பட்டது. இந்நிலையில் விருதுநகர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள 2 உணவகங்கள் விதிமுறைகளை மீறியதாக ஏற்கனவே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) ஜெகதீஸ்வரி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
கடைகளுக்கு ‘சீல்’
அப்போது இந்த கடைகள் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக தெரியவந்தது. அதன் அடிப்படையில் 2 கடைகளுக்கும் ‘சீல்’ வைத்தார்.
அப்போது கடை உரிமையாளர்கள் கமிஷனரின் கார் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனாலும் நகராட்சி நிர்வாகத்தினர் கடைகளை ‘சீல்’ வைத்துச் சென்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட கடை உரிமையாளர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். மேலும் இவர்களது கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் நகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.
அபராதம்
இதனைத்தொடர்ந்து இந்நகர் மேற்கு பாண்டியன் காலனியில் ஒரு உணவகம் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக அந்த உணவகத்திற்கு ‘சீல்’ வைக்கப்பட்டதுடன் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
விருதுநகர் நகராட்சி சாலையில் நகராட்சி அலுவலகத்திற்கு எதிரே உள்ள ஒரு பேக்கரி விதிமுறைகளுக்கு முரணாக பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்த நிலையில் நகராட்சி அதிகாரிகள் அந்த பேக்கரிக்கு ‘சீல்’ வைத்ததுடன் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
மேலும் இந்நகர் அருப்புக்கோட்டை ரோட்டில் ஒரு உணவகத்தில் தடை விதிக்கப்பட்ட பாலிதீன்பைகளை பயன்படுத்தியதால் அந்த உணவகத்திற்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது.
எச்சரிக்கை
இதுபற்றி நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) ஜெகதீஸ்வரி கூறியதாவது:-
நகரில் அரசின் முழு ஊரடங்கு விதிமுறைகளுக்கு முரணாக செயல்படும் உணவகங்கள் மீது ‘சீல்’ வைப்பு நடவடிக்கையும், அபராதமும் விதிக்கப்படும் என்று எச்சரித்தார். எனவே உணவகங்கள் அரசு அனுமதித்துள்ள நேரங்களில் பார்சல் சேவை மட்டும் வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.
மேலும் நகரில் அனைத்து பகுதிகளிலும் வாகனங்களில் காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்வோர் நகராட்சி நிர்ணயித்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டுமென்றும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
ஆய்வின் போது நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் குருசாமி, முத்துப்பாண்டி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story