திருவையாறு அருகே ஓட்டல் உரிமையாளர் வீட்டில் 17½ பவுன் நகைகள் கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
திருவையாறு அருகே ஓட்டல் உரிமையாளர் வீட்டில் 17½ பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
திருவையாறு:-
திருவையாறு அருகே ஓட்டல் உரிமையாளர் வீட்டில் 17½ பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஓட்டல் உரிமையாளர்
தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள கீழப்புனவாசல் கீழத்தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ்(வயது 35). லால்குடியில் ஓட்டல் நடத்தி வரும் இவர், கீழப்புனவாசலில் உள்ள தனது வீட்டை பூட்டி விட்டு திருவையாறில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
வாரத்தில் சில நாட்கள் அவர் கீழப்புனவாசலில் உள்ள வீட்டுக்கு செல்வது வழக்கம். அதன்படி நேற்று மதியம் கீழப்புனவாசல் வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு, திறந்து இருந்தது.
17½ பவுன் நகைகள் கொள்ளை
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த சங்கிலிகள் உள்பட 17½ பவுன் நகைகள், துணிகளை காணவில்லை. இது குறித்து தகவல் அறிந்த திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ்சந்திரபோஸ், மருவூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ், குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் கேசவமூர்த்தி மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், வீட்டில் ஆட்கள் இல்லை என்பதை அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் பின் கதவை உடைத்து உள்ளே புகுந்து, பீரோவையும் உடைத்து அதில் இருந்த நகைகள் மற்றும் துணிகளை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
தடயவியல் சோதனை
இதையடுத்து போலீசார் தஞ்சையில் இருந்து தடயவியல் நிபுணர் அமலா உள்ளிட்டோரை வரவழைத்து, கொள்ளை நடந்த வீட்டில் சோதனை மேற்கொண்டனர். மோப்ப நாய் ராஜராஜன் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. அந்த நாய் வீட்டின் பின்பகுதி வழியாக சிறிது தூரம் ஓடிச்சென்று, அங்கேயே படுத்துக்கொண்டது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும்.
இது குறித்து மருவூர் போலீஸ் நிலையத்தில் கோவிந்தராஜ் புகார் கொடுத்தார். அதன்பேரில் மருவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து 17½ பவுன் நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஓட்டல் உரிமையாளர் வீட்டில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story