3 மருந்தகங்களின் உரிமம் தற்காலிக ரத்து


3 மருந்தகங்களின் உரிமம் தற்காலிக ரத்து
x
தினத்தந்தி 31 May 2021 8:05 PM GMT (Updated: 31 May 2021 8:05 PM GMT)

டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்துகளை விற்பனை செய்த 3 மருந்தகங்களின் உரிமம் தற்காலிக ரத்து செய்யப்பட்டது.

பெரம்பலூர்:
தமிழக அரசு கொரோனா வைரஸ் தொற்றின் அறிகுறி ஏதேனும் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பரிசோதனை செய்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இருப்பினும் பொதுமக்கள் தங்கள் அறியாமையினால் தங்களுக்கு ஏற்படும் உடல் உபாதைகளுக்கு அருகில் உள்ள மருந்தகங்களுக்கு சென்று மருந்து, மாத்திரைகள் வாங்கி சுய மருத்துவம் செய்து கொள்ள முயற்சிக்கின்றனர். இதனால் கொரோனா தொற்று பாதிப்பு என தெரியாமலேயே உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. இவ்வாறான நடவடிக்கைகளை தடுத்திட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதையடுத்து, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மருந்தகங்களை மருந்தக ஆய்வாளர் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. அதன்பேரில் பெரம்பலூர் வட்டார பகுதிகளில் உள்ள மருந்தகங்களை ஆய்வு மேற்கொண்டபோது டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் அட்டவணை மருந்துகளை பொதுமக்களுக்கு விற்பனை செய்ததாக லாடபுரம், மேலப்புலியூர், சிறுவாச்சூர் ஆகிய கிராமங்களில் தலா ஒரு மருந்தகம் கண்டறியப்பட்டன. அதன்பேரில் அந்த 3 மருந்தகங்களின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே மருந்தகங்களின் உரிமையாளர்கள் டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் பொதுமக்களுக்கு மருந்து, மாத்திரைகளை வழங்கக் கூடாது. கொரோனா வைரஸ் தொற்று நோயினை கட்டுப்படுத்திட தமிழக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என்று கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Next Story