வீட்டின் கதவை உடைத்து ரூ.40 ஆயிரம் திருட்டு


வீட்டின் கதவை உடைத்து ரூ.40 ஆயிரம் திருட்டு
x
தினத்தந்தி 31 May 2021 8:05 PM GMT (Updated: 31 May 2021 8:05 PM GMT)

நாயக்கர்பாளையத்தில் வீட்டின் கதவை உடைத்து ரூ.40 ஆயிரத்தை திருடிய மர்ம நபர்கள், போலீஸ் மோப்ப நாயிடம் இருந்து தப்பிக்க மிளகாய் பொடியை தூவிச்சென்றனர்.

கீழப்பழுவூர்:

இரவில் ஆள் இல்லாத வீடு
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட நாயக்கர்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன். இவருடைய மனைவி சாந்தினி(வயது 38). இவர்கள் மெயின் ரோட்டில் வீடு ஒன்றை கட்டியுள்ளனர். தற்போது இவர்கள் குடும்பத்தோடு சென்னையில் தங்கி வேலை பார்த்து வருவதால், ஏதேனும் விசேஷங்களுக்கு மட்டும் சொந்த ஊர் வந்து செல்வார்கள்.
இதனால் இங்குள்ள வீட்டை சாந்தினியின் தாயார் நீலாவதி(60) பராமரித்து வருகிறார். பகலில் இந்த வீட்டில் இருக்கும் அவர், இரவில் தூங்குவதற்கு சங்கரன் கட்டளையில் உள்ள அவரது வீட்டிற்கும் சென்று விடுவார். இதன்படி நேற்று முன்தினம் அவரது வீட்டிற்கு தூங்கச்சென்ற அவர், நேற்று காலை சாந்தினியின் வீட்டிற்கு திரும்பி வந்தார்.
திருட்டு
அப்போது வீட்டின் ஜன்னல் கண்ணாடி, கதவு, பீேரா ஆகியவை உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது பற்றி தகவல் அறிந்த திருமானூர் போலீசார் அங்கு விரைந்து வந்து, திருட்டு நடந்த வீட்டை பார்வையிட்டனர். அப்போது வீட்டில் பயன்படுத்தப்பட்ட கையுறை ஒன்று கிடந்தது. திருட வந்த மர்ம கும்பல் கைரேகை நிபுணர்களிடம் இருந்து தப்பித்துக்கொள்ள கையுறை அணிந்து வந்தது, போலீசாருக்கு தெரியவந்துள்ளது. 
மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், நேற்று முன்தினம் இரவு அந்த வீட்டிற்கு வந்த மர்ம நபர்கள், முதலில் ஜன்னல் கண்ணாடியை உடைத்து உள்ளே யாராவது இருக்கிறார்களா? என்று பார்த்துவிட்டு, கடப்பாரை உதவியுடன் கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்தவற்றை திருடியுள்ளனர்.
போலீசார் விசாரணை
இதையடுத்து அலமாரியில் துணிகளுக்கு அடியில் நீலாவதி வைத்திருந்த ரூ.40 ஆயிரத்தை திருடிவிட்டு, அந்த வீட்டில் உள்ள அறைகளில் வேறு ஏதேனும் இருக்கிறதா? என்று நோட்டம் விட்டுள்ளனர். மேலும் நகைச்சுவை நடிகர் வடிவேல் பட பாணியில் மோப்பநாயிடம் இருந்து தப்பித்துக் கொள்ள வாசலில் இருந்து அவர்கள் சென்ற அனைத்து அறைகளிலும் மிளகாய்ப் பொடியைத் தூவி விட்டு, பின்வாசல் வழியாக தப்பிச் சென்றுள்ளனர், என்று தெரியவந்துள்ளது.
முதற்கட்டமாக நீலாவதியின் பணம் 40 ஆயிரம் திருடப்பட்டுள்ளது மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளது. பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகை, பணம் குறித்து நீலாவதியின் மகள் சாந்தினிக்குத்தான் தெரியும் என்பதால், அவர் வந்த பிறகுதான் என்னென்ன திருட்டு போயுள்ளது என்பது தெரியவரும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story