மாவட்ட செய்திகள்

ரூ.1½ கோடியில் 150 ஆக்சிஜன் செறிவூட்டிகள் + "||" + 150 oxygen concentrators

ரூ.1½ கோடியில் 150 ஆக்சிஜன் செறிவூட்டிகள்

ரூ.1½ கோடியில் 150 ஆக்சிஜன் செறிவூட்டிகள்
திருச்சி, தஞ்சை அரசு ஆஸ்பத்திரிகளுக்கு ரூ.1½ கோடி மதிப்பிலான 150 ஆக்சிஜன் செறிவூட்டிகளை 2 அமைச்சர்கள் வழங்கினர
திருச்சி
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது சொந்த நிதியில் இருந்து, ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பில் 150 ஆக்சிஜன் செறிவூட்டிகளை பெற்றார். அவற்றில் 75 செறிவூட்டிகள் திருச்சி தலைமை அரசு ஆஸ்பத்திரிக்கும், 75 செறிவூட்டிகள் தஞ்சை அரசு ஆஸ்பத்திரிக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.

திருச்சி தலைமை ஆஸ்பத்திரிக்கு 75 ஆக்சிஜன் செறிவூட்டிகளை ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. நிகழ்ச்சியில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு அவற்றை ஆஸ்பத்திரிக்கு வழங்கினர்.
நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு, திருச்சி அரசு மருத்துவமனை டீன் வனிதா, திருச்சி மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன், சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி (ஸ்ரீரங்கம்), ஸ்டாலின் குமார் (துறையூர்) மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறியதாவது:-
சராசரி 200 பேருக்கு தொற்று
ஆக்சிஜன் செறிவூட்டிகள் கொரோனா நோயாளிகளுக்கு மிகுந்த பயன் உள்ளதாக இருக்கும். தற்போது திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்காக 1,099 படுக்கைகள் உள்ளது. அதில் 175 படுக்கைகள் காலியாக உள்ளது. ஆக்சிஜன் படுக்கை 743. அவற்றில் 30 காலியாக உள்ளது. ஆக்சிஜன் இல்லாத படுக்கை 356. அவற்றில் 175 காலியாக உள்ளது. ஒரு நாளைக்கு சராசரியாக 200 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல் 200 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்புகின்றனர்.
தற்போது நோயாளிகளின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்துள்ளது. தினமும் 1,600, 1,700 என்ற எண்ணிக்கையில் இருந்த நிலை மாறி தற்போது கணிசமாக குறைந்து வருகிறது. அதற்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள்தான் காரணம்.
 கால்வாய் சீரமைக்க நிதி
திருச்சி, தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டத்தில் கால்வாய்கள் சீரமைக்க ரூ.66 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அவற்றில் திருச்சி மாநகராட்சியில் உள்ள கால்வாய்களை சீரமைக்க ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இன்று முதல் (அதாவது நேற்று) உய்யக்கொண்டான் கால்வாயை தூர்வாரும் பணிகள் தொடங்க உள்ளது.
 அ.தி.மு.க.வினருக்கு எப்போதும் தி.மு.க.வை திட்டுவது மட்டும்தான் தெரியும். அவர்கள் என்ன பாராட்டு மழையா பொழிந்து விடப் போகிறார்கள்? இவ்வாறு அவர் தெரிவித்தார்.