தனியார் ஓட்டல் பார்களில் மதுபாட்டில் விற்பனையா?தனிப்படை போலீசார் விசாரணை


தனியார் ஓட்டல் பார்களில் மதுபாட்டில் விற்பனையா?தனிப்படை போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 31 May 2021 9:21 PM GMT (Updated: 31 May 2021 9:21 PM GMT)

திருச்சி மாநகரில் உள்ள தனியார் ஓட்டல் பார்களில் மதுபாட்டில்கள் விற்கப்படுகிறதா? என்று தனிப்படை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்

திருச்சி
தமிழகத்தில் முழு ஊரடங்கால் கடந்த 10-ந் தேதி முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், உஷாரான மதுப்பிரியர்கள் முன்கூட்டியே மதுபாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்தனர். தற்போது மதுபாட்டில் கிடைக்காததால் மதுப்பிரியர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். அதேவேளையில் முன்கூட்டியே மதுப்பாட்டில் வாங்கி பதுக்கி வைத்த சிலர், லாப நோக்கத்தோடு ஒரு குவாட்டர் ரூ.150 விலை உடையதை ரூ.300-க்கு விற்று வந்தனர்.
தற்போது அதன்விலை மேலும் உயர்ந்து குவாட்டர் ரூ.500, ரூ.600 என கள்ளத்தனமாக பதுக்கி விற்பனை நடக்கிறது. இதனால், திருச்சியில் திருட்டுத்தனமாக கூடுதல் விலைக்கு மது விற்பது, சாராயம் காய்ச்சுவது தொடர்ந்து வருகிறது. இதை தடுக்க மாநகர போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின்பேரில் போலீசார் தனிப்படை அமைத்து தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
ஓட்டல் பார்களில் சோதனை
இந்தநிலையில் திருச்சியில் தனியார் ஓட்டல்களில் உள்ள மதுபான பார்களில் மது விற்கப்படுவதாக தனிப்படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருச்சி மத்திய பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஓட்டல்களில் உள்ள 18 பார்கள் உள்பட மாநகரம் முழுவதும் உள்ள 40-க்கும் மேற்பட்ட பார்களில் நேற்று சோதனை நடத்தப்பட்டது.
ஊரடங்கு போடப்பட்ட 9-ந் தேதி இரவு இறுதியாக மது பானங்கள் இருப்பு எவ்வளவு இருந்தது? என்றும், தற்போது அதன்படி இருப்பு உள்ளதா? அல்லது திருட்டுத்தனமாக விற்கப்பட்டதா? என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும், கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் மது உற்பத்தி செய்யப்பட்டு வாகனங்கள் மூலம் கொண்டு வரப்பட்டு திருச்சி கோப்பு, எட்டரை, ராம்ஜிநகர் உள்ளிட்ட பகுதிகளில் மது விற்பனை செய்யப்படுவதாக தனிப்படைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட் டுள்ளனர். குளித்தலை பகுதியில் போலி மது ஆலை உள்ளதா? எனவும் சோதனை நடத்தப்பட்டது.

Next Story