கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை 354 குழுக்கள் மூலம் தீவிர கண்காணிப்பு அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்


கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை 354 குழுக்கள் மூலம் தீவிர கண்காணிப்பு அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்
x
தினத்தந்தி 31 May 2021 10:38 PM GMT (Updated: 31 May 2021 10:38 PM GMT)

சேலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை 354 குழுக்கள் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.

சேலம்:
சேலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை 354 குழுக்கள் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.
ஆலோசனை கூட்டம்
சேலம் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றுக்குள்ளாகும் நபர்களை கொரோனா சிகிச்சை மையங்களில் சேர்த்து கண்காணிக்கப்படுவதையும், முழு ஊரடங்கை முழுமையாக அமல்படுத்தப்பட்டதை கண்காணிப்பதற்காகவும் நியமிக்கப்பட்ட பொறுப்பு அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று சேலம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது.
இதற்கு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் கார்மேகம், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய மேலாண்மை இயக்குனர் முருகேசன், எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது:-
சிறப்பு குழுக்கள்
சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு, பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்குள்ளாகும் நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை உடனுக்குடன் ஏற்படுத்தி கொடுத்திட மாவட்டம் முழுவதும் 32 மண்டலங்கள் உருவாக்கப்பட்டு அவற்றுக்கு 32 சிறப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
இவர்களின் கட்டுப்பாட்டில் 354 குழுக்கள் அமைக்கப்பட்டு, பொறுப்பு அலுவலர்கள் கொரோனா நோயாளிகளின் விவரங்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை அளிக்க ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட பணிகளை செய்து வருகின்றனர். மேலும் இந்த குழுக்கள் 32 சிறப்பு அலுவலர்களின் கண்காணிப்பில் பணியாற்றுவதோடு நாள்தோறும் தாங்கள் மேற்கொள்ளும் பணிகள் குறித்த விவரங்கள் உள்ளிட்டவைகளை சிறப்பு குழுக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
தேவையான பொருட்கள்
மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பு அலுவலர்கள் கொரோனா தொற்று பரவலை தடுத்திடவும், ஊரடங்கினை கண்காணித்திடவும் வேண்டும். மேலும் அவர்கள் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு தனியாக உள்ளார்களா? என கண்காணிக்கவும், அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை, தேவையான பொருட்கள் மற்றும் உதவிகள் கிடைக்கிறதா? என கண்காணித்து உறுதி செய்ய வேண்டும்.
இது தவிர கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பத்தினர் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள் நடமாடும் வாகனங்கள் மூலம் வீடுகளுக்கு நேரில் சென்று விற்பனை செய்யப்பட்டு வருகிறதா? என்பதையும் குழுக்கள் கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் செந்தில்பாலாஜி பேசினார்.
கூட்டத்தில் மேட்டூர் உதவி கலெக்டர் சரவணன், சேலம் மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story