சேலத்தில் மளிகை பொருட்களை வாங்க மொத்த விற்பனை கடைகளில் குவிந்த வியாபாரிகள்
சேலத்தில் மளிகை பொருட்களை வாங்க மொத்த விற்பனை கடைகளில் நேற்று வியாபாரிகள் குவிந்தனர்.
சேலம்:
சேலத்தில் மளிகை பொருட்களை வாங்க மொத்த விற்பனை கடைகளில் நேற்று வியாபாரிகள் குவிந்தனர்.
மளிகை பொருட்கள்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்ததை அடுத்து தளர்வில்லா முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதேசமயம் ஏற்கனவே வீடுகளில் வாங்கி வைத்துள்ள மளிகை பொருட்கள் தீர்ந்து இருக்கும் என்பதால் பொதுமக்களின் வசதிக்காக மளிகை பொருட்களையும் வீடு, வீடாக கொண்டு சென்று விற்பனை செய்ய தமிழக அரசு அனுமதி அளித்தது.
அதன்படி சேலம் மாவட்டத்தில் நேற்று சுமார் 10 ஆயிரம் வியாபாரிகள் மளிகை பொருட்களை வாங்க மொத்த கடைகளில் குவிந்தனர். இதையொட்டி சேலத்தில் வர்த்தக கேந்திரமாக விளங்கக் கூடிய செவ்வாய்பேட்டை மற்றும் லீ பஜாரில் உள்ள மொத்த விற்பனை கடைகள் நேற்று காலை திறக்கப்பட்டன.
போக்குவரத்து நெரிசல்
இதையடுத்து லாரிகளில் கொண்டு வரப்பட்ட, மளிகை உள்ளிட்ட பொருட்களை இறக்கும் பணியிலும், ஏற்றும் பணியிலும் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இதனால் செவ்வாப்பேட்டை மற்றும் லீ பஜார் பகுதிகளில் சரக்கு வாகனங்கள் அதிகளவில் நின்றதால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தொடர்ந்து சரக்கு வாகனங்கள் மூலமாக மளிகை பொருட்களை வியாபாரிகள் வாங்கிக்கொண்டு சென்றனர். நேற்று ஒரு சில இடங்களில் நடமாடும் வாகனங்கள் மூலம் மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் பணி தொடங்கப்பட்டது.
மாநகராட்சியில் 59 வாகனங்கள்
சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 59 வாகனங்கள் மூலம் மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்பட உள்ளது. அதாவது சூரமங்கலம் மண்டலத்தில் 17 வாகனங்கள், அஸ்தம்பட்டி மண்டலத்தில் 22 வாகனங்கள், அம்மாபேட்டை மண்டலத்தில் 5 வாகனங்கள், கொண்டலாம்பட்டி மண்டலத்தில் 15 வாகனங்கள் மூலம் மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்பட உள்ளது.
இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் சேலம் மாநகரில் அழகாபுரம், அஸ்தம்பட்டி, சூரமங்கலம், அம்மாபேட்டை, நெத்திமேடு, அன்னதானப்பட்டி, கிச்சிபாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் நடமாடும் வாகனங்கள் மூலம் மளிகை பொருட்கள் விற்பனை நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதிகாரிகள் கெடுபிடி
மளிகை பொருட்கள் விற்பனை குறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட தலைவர் பெரியசாமி கூறியதாவது:-
தமிழக அரசு மொத்த மார்க்கெட் செயல்படலாம் என அறிவித்துள்ளது. அதன்படி சேலம் மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரம் வியாபாரிகள் மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் பணியை தொடங்கியுள்ளனர். இவர்கள் பொதுமக்கள் வசிக்கும் இடங்களுக்கு நேரடியாக சென்று மளிகை பொருட்களை விற்பனை செய்வார்கள். சேலம் மாநகரில் மட்டும் சுமார் 3 ஆயிரம் வியாபாரிகள் மளிகை பொருட்களை விற்பனை செய்கின்றனர். செவ்வாய்பேட்டையில் நேற்று காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே மொத்த கடைகளை வணிகர்கள் திறந்தார்கள்.
அப்போது போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் வந்து பல்வேறு கெடுபிடிகள் விதித்ததால் கடும் அவதிக்குள்ளாகினர். சில வணிகர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. கொரோனா பாதிப்பால் ஏராளமான வணிகர்கள் உயிரிழந்துள்ளனர். எனினும் வணிகர்கள் தங்களது உயிரை பணையம் வைத்து வீதி, வீதியாக சென்று மளிகை பொருட்கள் விற்பனை செய்கிறார்கள். ஆனால் மாநகராட்சி அதிகாரிகளின் கெடுபிடி அதிகமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story