பாப்பாரப்பட்டி அருகே மலைக்கிராமங்களில் டிராக்டர் மூலம் உழவு பணிகள்
பாப்பாரப்பட்டி அருகே மலைக்கிராமங்களில் டிராக்டர் மூலம் உழவு பணிகள்
பாப்பாரப்பட்டி:
பாப்பாரப்பட்டி அருகே வட்டுவனஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டூர்மலை, ஏரிமலை, அலக்கட்டு ஆகிய மலைக்கிராமங்களுக்கு இதுவரை சாலை வசதி கிடையாது. இந்த கிராமங்களில் உள்ள மலைவாழ் மக்கள் தங்கள் பட்டா நிலங்களில் மாடுகளை கொண்டு ஏர் உழுது விவசாயம் செய்து வந்தனர். கடந்த சில ஆண்டுகளாக நாட்டு மாடுகள் படிப்படியாக குறைந்து வந்தது. இதனால் மாடுகளை வைத்து உழுது விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
இந்தநிலையில் டிராக்டர் உள்ளிட்ட நவீன வாகனங்களை பயன்படுத்தி விவசாயம் செய்வதற்கு மலைக்கிராமங்களில் சாலை வசதி இல்லாததால் அப்பகுதி விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனர். கடந்த சட்டசபை தேர்தலின் போது கோட்டூர்மலை, ஏரிமலை ஆகிய 2 வாக்குச்சாவடிகளில் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வலியுறுத்தி கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அதிகாரிகள் கிராம மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்தனர். பின்னர் ஏரிமலை, அலக்கட்டு கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்தனர். தற்போது அதிகாரிகள் அளித்த வாக்குறுதிப்படி தங்கள் மலைக்கிராமங்களுக்கு உழவு பணிகளுக்காக டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களை கொண்டு செல்ல வனத்துறையினர் அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
மலைவாழ் மக்களின் கோரிக்கையை ஏற்று மலைக்கிராமத்திற்கு செல்லும் சாலையை சீர் செய்து சமவெளி பகுதியில் இருந்து டிராக்டர்களை மலை கிராமங்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து தற்போது விவசாய நிலங்களில் முதல்முறையாக டிராக்டர்களை கொண்டு விவசாயிகள் உழவு பணிகளை மேற்கொண்டனர். தங்களது பாரம்பரிய வழக்கப்படி நாட்டு மாடுகளை கொண்டு ஏர் உழுது விவசாயம் செய்த நிலை மாறி தற்போது நவீன முறைக்கு மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.
======
Related Tags :
Next Story