சசிகலா எந்த சூழ்நிலையிலும் அ.தி.மு.க.வில் நுழைய முடியாது கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. பேட்டி
சசிகலா எந்த சூழ்நிலையிலும் அ.தி.மு.க.வில் நுழைய முடியாது கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. பேட்டி
வேப்பனப்பள்ளி, ஜூன்.1-
சசிகலா எந்த சூழ்நிலையிலும் அ.தி.மு.க.வில் நுழைய முடியாது என்று கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. கூறினார்.
உறுதுணையாக இருக்கும்
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க. ஆட்சிக்கு வந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை. இந்த நாட்களில் ஆட்சியாளர்கள் அரசு எந்திரத்தின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்கே போதாது. எனவே முதல்-அமைச்சர் மற்றும் ஆட்சியாளர்கள் செயல்படுவதற்கு எதிர்க்கட்சிகள் உறுதுணையாக இருக்கும்.
அ.தி.மு.க.விற்கும் சசிகலாவிற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. சசிகலா தற்போது அ.தி.மு.க.வில் இல்லை. மாறாக எதிர்க்கட்சியாக இருந்து நன்றாக செயல்பட்டு கொண்டிருக்கும் அ.தி.மு.க.வில் எப்படியாவது குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்று ஒரு சிலர் சசிகலாவை முன்னிறுத்தி இதுபோன்று கருத்துக்களை சொல்லி கொண்டிருக்கின்றனர். இவர்கள் ஏற்படுத்துகின்ற குழப்பத்திற்கு ஒரு அ.தி.மு.க. தொண்டர் கூட செவிசாய்க்க மாட்டார்.
நுழைய முடியாது
அ.தி.மு.க. நல்ல முறையில் சென்று கொண்டிருக்கிறது. இந்த இயக்கத்தை ஏதாவது ஒரு வகையில் திசைதிருப்பி தொண்டர்களையும், நிர்வாகிகள் மத்தியிலும் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த கருத்துகளை சொல்கிறார்கள். நிச்சயமாக அவர்களின் எண்ணம் நிறைவேறாது.
சசிகலா பேசிய ஆடியோவை கேட்டேன். எந்த தொண்டரும் சசிகலாவிடம் பேசவில்லை. மாறாக சசிகலாதான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுகிறார். ஜெயலலிதாவின் ஆன்மா சாந்தியடைய சசிகலா அ.தி.மு.க.வில் இருந்து ஒதுங்கி அமைதியாக இருப்பது நல்லது என்று கருதுகிறேன். எந்த சூழ்நிலையிலும் சசிகலா அ.தி.மு.க.வில் நுழைய முடியாது. அதற்கான வாய்ப்பும் இல்லை.
இரையாகி விடக்கூடாது
இந்த கொரோனா காலத்தில் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் அந்தந்த மாவட்டத்தில் இருக்கிறார்கள். அப்போது சில கருத்துக்களை சொல்லும்போது அந்த பகுதியில் உள்ள பிரச்சினைகளையும், தேவைகளையும் சொல்வது இயற்கை.
அதன் அடிப்படையில் தான் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் கருத்துக்களை சொல்கின்றனர். இதில் எந்த கருத்து வேறுபாடுகளும் இல்லை. இதுபோன்ற சில கருத்துக்களை உருவாக்கி இதில் குளிர்காயலாம் என்று சிலர் முயற்சி செய்கின்றனர். அதற்கு சசிகலா இரையாகி விடக்கூடாது.
ஓ.பன்னீர்செல்வம்
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஒரு கோரிக்கை வைத்தார். அதில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.
அந்த கோரிக்கையை ஏற்று முதல்-அமைச்சரும் ஒரு உத்தரவை பிறப்பித்தார். தன் கோரிக்கையை ஏற்றதால் ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது இயற்கையானது.
இவ்வாறு அவர் கூறினார்.
======
Related Tags :
Next Story