இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த வேண்டும்
நீலகிரி மாவட்டத்துக்கு வர இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என்று முதல்-அமைச்சருக்கு, கலெக்டர் கோரிக்கை விடுத்து உள்ளார்.
ஊட்டி
நீலகிரி மாவட்டத்துக்கு வர இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என்று முதல்-அமைச்சருக்கு, கலெக்டர் கோரிக்கை விடுத்து உள்ளார்.
ஆக்சிஜன் செறிவூட்டிகள்
நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று தனியார் அறக்கட்டளை மூலம் 37 ஆக்சிஜன் செறிவூட்டிகள், முககவசங்கள் போன்றவை கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவிடம் வழங்கப்பட்டது. அப்போது சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி உடனிருந்தார். அதன் பின்னர் கலெக்டர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
நீலகிரியில் தன்னார்வலர்கள் மூலம் ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டு வருவது கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு உதவிகரமாக உள்ளது. போதுமான அளவு படுக்கை வசதிகள் ஆக்சிஜன் வசதியுடன் இருக்கிறது.
கடும் நடவடிக்கை
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வெளியே வரக்கூடாது. வெளிநபர்கள் உள்ளே செல்லவும் கூடாது. கொரோனா முதல் அலையின் போது பொதுமக்கள் அரசின் கட்டுப்பாடுகளுக்கு ஒத்துழைப்பு அளித்தார்கள்.
தற்போது ஒத்துழைப்பு அளிப்பது குறைந்து உள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் அரசின் விதிமுறைகளை மீறியதாக 98 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 3 நிறுவனங்கள் மூடப்பட்டு இருக்கிறது
அதிக தொற்று ஏற்பட்டதால் சில தனியார் தொழிற்சாலைகளுக்கு மின் வினியோகம் நிறுத்தப்பட்டது.
விதிகளை மீறினால் சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து வரும் நபர்களை பணிக்கு அமர்த்தினால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இ-பாஸ் நடைமுறை
வீடு, வீடாக ஆய்வு செய்து, யாருக்கேனும் அறிகுறிகள் தென்பட்டால் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை குறைக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம்.
கோவையில் நடந்த ஆய்வு கூட்டத்தில் முதல்-அமைச்சரிடம் நீலகிரியில் குறைவான மருத்துவ வசதிகள் இருப்பதோடு, காலி பணியிடங்கள் உள்ளது. எனவே போதுமான அளவு தடுப்பூசிகளை ஒதுக்க வேண்டும். இ-பதிவு மூலம் அதிகம் பேர் வருவதால் தொற்று பரவும் அபாயம் உள்ளது. ஆகவே நீலகிரிக்கு வர இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story