மளிகை பொருட்கள் விற்பனைக்காக 150 வாகனங்களுக்கு அனுமதி


மளிகை பொருட்கள் விற்பனைக்காக 150 வாகனங்களுக்கு அனுமதி
x
தினத்தந்தி 1 Jun 2021 12:34 AM GMT (Updated: 1 Jun 2021 12:34 AM GMT)

நீலகிரி மாவட்டத்தில் மளிகை பொருட்கள் விற்பனைக்காக 150 வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. மேலும் கூடுதல் வார்டுகளை ஒதுக்க வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர்.

ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் மளிகை பொருட்கள் விற்பனைக்காக 150 வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. மேலும் கூடுதல் வார்டுகளை ஒதுக்க வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர்.

முழு ஊரடங்கு

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டாலும், பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 

அதன்படி வாகனங்கள் மூலம் காய்கறி, பழங்கள் பொதுமக்கள் வசிக்கும் இடங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. 

மளிகை பொருட்கள்

அந்த வகையில் மளிகை பொருட்களை விற்பனை செய்ய அரசு அனுமதி அளித்து உள்ளது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் நேற்று முதல் வாகனங்கள் மூலம் மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது. 

இதற்கான அனுமதி சீட்டு ஊட்டி, குன்னூர், கூடலூர், நெல்லியாளம் ஆகிய 4 நகராட்சி அலுவலகங்கள், 4 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், 11 பேரூராட்சி அலுவலகங்களில் வழங்கப்பட்டது. ஒரு வார்டுக்கு ஒரு வாகனம் என ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

கூடுதல் வார்டுகள்

இந்த நிலையில் நேற்று ஊட்டி நகராட்சி அலுவலகத்தில் மளிகை பொருட்கள் விற்பனை செய்ய வாகனங்களுக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டது. வியாபாரிகள் அனுமதி சீட்டுகளை பெற வரிசையில் நின்றிருந்தனர். 

மேலும் வாடகைக்கு வாகனத்தை எடுத்து சென்று மளிகை பொருட்கள் விற்பனை செய்வதால், ஒரு வார்டு பகுதிக்கு மட்டும் விற்பனை செய்தால் கட்டுபடியாகாது. கூடுதலாக வார்டுகளை ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக வியாபாரிகளிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மாலை 6 மணி வரை...

நீலகிரியில் வீடு, வீடாக மளிகை பொருட்களை விற்பனை செய்ய 150-க்கும் மேற்பட்ட அனுமதி சீட்டுகள் வழங்கப்பட்டு உள்ளது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை விற்பனை செய்யலாம். 

மளிகை பொருட்கள், பிஸ்கட் போன்றவற்றை ஊரடங்கு காலம் முடியும் வரை சரியான விலையில், தரமானவற்றை விற்பனை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதனை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்து இருக்கிறது.


Next Story