வருமானமின்றி தவிக்கும் சுற்றுலா வழிகாட்டிகள்


வருமானமின்றி தவிக்கும் சுற்றுலா வழிகாட்டிகள்
x
தினத்தந்தி 1 Jun 2021 6:40 AM IST (Updated: 1 Jun 2021 6:40 AM IST)
t-max-icont-min-icon

முழு ஊரடங்கு காரணமாக சுற்றுலா வழிகாட்டிகள் வருமானமின்றி தவித்து வருகின்றனர். எனவே நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று அரசுக்கு, கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ஊட்டி

முழு ஊரடங்கு காரணமாக சுற்றுலா வழிகாட்டிகள் வருமானமின்றி தவித்து வருகின்றனர். எனவே நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று அரசுக்கு, கோரிக்கை விடுத்து உள்ளனர்.

சுற்றுலா தலங்கள்

நீலகிரி மாவட்டம் சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இத்தாலி, சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகள், இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து ஆண்டுதோறும் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

அவர்களுக்கு சுற்றுலா தலங்களை சுற்றி காண்பிக்கவும், அதன் வரலாற்றை விளக்கவும் வழிகாட்டிகள் உள்ளனர். நீலகிரியில் சுற்றுலா வழிகாட்டிகள் 170 பேர் உள்ளனர். இதில் 30 பேருக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் அனுமதி அட்டை வழங்கப்பட்டு உள்ளது.

சுற்றுலா வழிகாட்டிகள்

ஊட்டி சேரிங்கிராஸ், மத்திய பஸ்நிலையம் ஆகிய 2 இடங்களில் சுற்றுலா வழிகாட்டிகள் தகவல் மையம் உள்ளது. இங்கு பணியில் இருக்கும் சுற்றுலா வழிகாட்டிகளிடம் சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்கள் குறித்த விவரங்களை பெறுவதுடன், பல்வேறு இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டு வருகின்றனர். இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு வழிகாட்டிகள் குடும்பத்தை நடத்தி வந்தனர்.

வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு புரியும் வகையில் ஆங்கிலம், இந்தி மொழிகளில் பேசி உதவி செய்வார்கள். நீண்ட பயண திட்டத்துடன் வருகிறவர்களுக்கு ஊட்டியை சுற்றி பார்த்துவிட்டு மதுரை, கொச்சி, சென்னை போன்ற இடங்களை சுற்றி காண்பித்து வருகின்றனர். 

வாழ்வாதாரம் பாதிப்பு

இதற்கிடையே கொரோனா பரவல் மற்றும் முழு ஊரடங்கு உத்தரவால் அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டு உள்ளன. மேலும் சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் அவர்களை நம்பி பிழைப்பு நடத்தி வந்த சுற்றுலா வழிகாட்டிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.  அவர்கள் வருமானமின்றி தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து சுற்றுலா வழிகாட்டி மேத்யூஸ் என்பவர் கூறியதாவது:- நான் கடந்த 16 ஆண்டுகளாக சுற்றுலா வழிகாட்டியாக உள்ளேன். சுற்றுலா பயணிகளை சுற்றுலா தலங்களுக்கு அழைத்து சென்று வருவதன் மூலம் வருமானம் கிடைத்து வந்தது. ஊரடங்கால் சுற்றுலா பயணிகள் வரவில்லை. இதனால் வருமானம் இன்றி வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டு உள்ளோம்.

நிவாரண உதவி

தற்போது மாற்று வேலைக்கும் செல்ல முடியவில்லை. உதவி இல்லாமல் தவித்து வருகிறேன். என்னை போன்று பல சுற்றுலா வழிகாட்டிகள் இதே நிலையில் உள்ளனர். இந்த மாதம் முதல் குழந்தைகளுக்கு ஆன்லைன் மூலம் பள்ளிகளில் பாடம் நடத்துவார்கள். 

அதற்கு கூட கட்டணம் செலுத்த முடியாத நிலை உள்ளது. எனவே சுற்றுலா வழிகாட்டிகளுக்கு அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story