கூடலூர்-கேரள சாலைகள் மூடல்


கூடலூர்-கேரள சாலைகள் மூடல்
x
தினத்தந்தி 1 Jun 2021 6:40 AM IST (Updated: 1 Jun 2021 6:40 AM IST)
t-max-icont-min-icon

தொற்று பரவலை தடுக்க கூடலூர்-கேரள சாலைகள் மூடப்பட்டன.

கூடலூர்

தொற்று பரவலை தடுக்க கூடலூர்-கேரள சாலைகள் மூடப்பட்டன. 

தொற்று பரவும் அபாயம்

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை தினமும் 500-ஐ கடந்து வருகிறது. இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு, கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டார். மேலும் அண்டை மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களை முறையாக தணிக்கை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார். 

இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில், வெளிமாநிலத்தை சேர்ந்த பலரும் இ-பதிவு பெற்று கூடலூர் பகுதிக்கு வந்து செல்வது தெரியவந்தது. இதனால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.

சாலைகள் மூடல்

இந்த நிலையில் கூடலூரில் இருந்து கேரளா செல்லும் சாலைகளை முழுமையாக மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதன் காரணமாக கூடலூர் பகுதியில் உள்ள நாடுகாணி, பாட்டவயல், சோலாடி, நம்பியார்குன்னு உள்பட 10-க்கும் மேற்பட்ட சாலைகளின் குறுக்கே போலீசார் தடுப்புகளை வைத்து மூடினர். 

அங்கு கூடலூர் ஆர்.டி.ஓ. ராஜ்குமார், தாசில்தார் தினேஷ், வன உரிமை அமர்வு அலுவலர் சிவக்குமார், தேவாலா போலீஸ் சூப்பிரண்டு அமீர் அகமது ஆகியோர் கேரள எல்லைகளில் நேற்று மதியம் 12 மணிக்கு ஆய்வு நடத்தினர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

இ-பதிவு செய்திருந்தாலும்...

அப்போது போலீசாரிடம் அதிகாரிகள் கூறியதாவது:- கூடலூர் பகுதியில் இருந்து அவசர சேவைக்காக கேரளாவுக்கு செல்பவர்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி உள்ளார்களா? என கண்காணிக்க வேண்டும். இதேபோல் கேரளாவில் இருந்து கூடலூர் பகுதிக்குள் நுழையும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் இ-பதிவு செய்திருந்தாலும் தவிர்க்க முடியாத காரணமாக இருந்தால் மட்டுமே அனுமதிக்க வேண்டும். 

இ-பதிவில் குறிப்பிட்டுள்ள காரணத்தின் உண்மை தன்மையை விசாரிக்க வேண்டும். இ-பதிவு பெற்று இருந்தாலும் முக்கிய காரணமாக இருந்தால் மட்டுமே அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் அறிவுறுத்தினர்.


Next Story